தூத்துக்குடி மாவட்டத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 Oct 2017 8:45 PM GMT (Updated: 21 Oct 2017 1:11 PM GMT)

தமிழ்நாட்டில் சம்பா, பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்களை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

பயிர் காப்பீடு

தமிழ்நாட்டில் சம்பா, பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்களை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் (2017– 2018) தூத்துக்குடி மாவட்டத்தில் 270 வருவாய் கிராமங்களுக்கு காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன்பெறாத விவசாயிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவன முகவர்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு

இந்த திட்டத்தில் பதிவு செய்ய அடுத்த மாதம் (நவம்பர்) 30–ந் தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு தொகை செலுத்தி தங்களது நெற்பயிரை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயிர் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.345 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பொதுச் சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.


Next Story