நடிகர் விஜய்யை வளைத்துப் போட பா.ஜனதா மிரட்டல் திருமாவளவன் குற்றச்சாட்டு
‘மெர்சல்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜனதா தலைவர்கள், நடிகர் விஜய்யை வளைத்துப் போடுவதற்காக மிரட்டல் விடுக்கிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
திருவொற்றியூர்,
எண்ணூர் விரைவு சாலை விரிவாக்கத்துக்காக திருவொற்றியூர் நல்லதண்ணீர் ஓடைக்குப்பத்தில் உள்ள 446 மீனவர்களின் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதற்காக அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நேற்று நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மீனவ மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
சாலை விரிவாக்கத்துக்கு தேவையான இடம்போக மீதம் உள்ள இடங்களில் மீனவர்கள் குடியிருக்க அனுமதிக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாரதீய ஜனதா கட்சி அ.தி.மு.க.வில் தீவிரமாக தலையிடுகிறது. தமிழக அரசியலில் குழப்பத்தை உண்டாக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதை ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் சுட்டிக்காட்டி உள்ளது.
இப்போது எல்லா கட்சிகளும் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. ஆளும் கட்சியும் அதற்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சுதந்திரமாகவும், சுயமாகவும் இயங்க வேண்டும். மத்திய அரசு அதிகார வலிமையை பயன்படுத்தி மாநில அரசின் உரிமையில் தலையிடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது.
‘மெர்சல்’ திரைப்படத்தை எதிர்த்து பா.ஜனதா தலைவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதில் கருத்து சுதந்திரம் என்பது கூட இல்லை. இதை அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கருதுகிறேன். அந்த படத்தை விளம்பர படுத்தவேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு செயல்படுவதாகத்தான் நான் கருதுகிறேன்.
ஒரு மிரட்டல் விடுப்பதன் மூலம் படம் வெற்றிகரமாக ஓடும் என்ற காரணத்தால், அந்த படத்தின் கதாநாயகன்(நடிகர் விஜய்) தங்களுக்கு சாதகமாக வருவார் என்று எண்ணி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அவர் வந்து விடுவார் என கருதி இவ்வாறு செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அலெக்சாண்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.