பெங்களூருவில் சம்பவம் போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடி


பெங்களூருவில் சம்பவம் போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடி
x
தினத்தந்தி 21 Oct 2017 10:15 PM GMT (Updated: 21 Oct 2017 9:36 PM GMT)

பெங்களூருவில், போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு பையப்பனஹள்ளி அருகே வசித்து வருபவர் ராஜதுரை (வயது 26). இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை உள்பட 18 வழக்குகள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன. இதனால், இவருடைய பெயர் பெங்களூரு மாநகர போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளது. சமீபத்தில் கைதான அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இருப்பினும், அவர் தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், போலீசில் சிக்காமல் இருக்க அவர் தமிழகத்துக்கு சென்று தலைமறைவானதும் தெரியவந்தது.

இந்த நிலையில், சோழதேவனஹள்ளி அருகே ராஜதுரை பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று அதிகாலையில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராதோடு தலைமையிலான போலீசார் சோழதேவனஹள்ளிக்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர்.

அப்போது, போலீசாரை பார்த்த ராஜதுரை உடனடியாக தனது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பித்து செல்ல முயன்றார். இதையடுத்து, போலீசார் உடனடியாக போலீஸ் வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். அத்துடன், போலீஸ் வாகனம், அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால், ராஜதுரை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். மேலும், அவர் கீழே விழுந்த வேகத்தில் உடனடியாக எழுந்து தப்பித்து ஓடினார்.

அவரை போலீஸ் ஏட்டு நரசிம்ம மூர்த்தி விரட்டிச்சென்று மடக்கி பிடித்தார். அப்போது, ஆத்திரமடைந்த ராஜதுரை தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து நரசிம்ம மூர்த்தியின் கையில் வெட்டிவிட்டு ஓடினார். இதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராதோடு, ராஜதுரையை சரண் அடையும்படி கூறினார். ஆனால், அவர் சரண் அடையாமல் அங்கிருந்து ஓடினார். மேலும், அவரை பிடிக்க சென்ற போலீசாரையும் அவர் தாக்க முயன்றார்.

இதனால், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராதோடு தனது துப்பாக்கியை எடுத்து ராஜதுரையை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். அப்போது ஒரு துப்பாக்கி குண்டு அவருடைய காலில் பாய்ந்தது. இதனால் அவர் ஓட முடியாமல் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதைத்தொடர்ந்து ராஜதுரையை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

குண்டு காயமடைந்த ரவுடி ராஜதுரை, வெட்டுக்காயம் அடைந்த நரசிம்ம மூர்த்தி ஆகியோரை தனியார் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று சோழதேவனஹள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story