அவினாசியில் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


அவினாசியில் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Oct 2017 10:45 PM GMT (Updated: 21 Oct 2017 9:48 PM GMT)

அவினாசி பகுதியில் சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 10-வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வி.எஸ்.வி.காலனி பகுதியை சேர்ந்த 5 பேருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அவர்கள் கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

அவினாசியில் மற்ற வார்டுகளை விட 10-வது வார்டு வி.எஸ்.வி.காலனி பகுதியில் அதிகமான வீடுகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்த பனியன் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் நிறுவனத்தில் டீ குடித்துவிட்டு பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் காகிதங்களை வீதியில் வீசுகின்றனர்.

அதுபோல் வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் தினசரி அதிக அளவில் ரோட்டில் கொட்டப்படுகிறது. இந்த பகுதியில் செடி, கொடிகள் படர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் வி.எஸ்.வி. சாலைப்பகுதியில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே குட்டைபோல் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியை சேர்ந்த பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவினாசி பேரூராட்சி 10-வது வார்டு காமராஜர் வீதி, நாய்க்கன்தோட்டம் மற்றும் வி.எஸ்.வி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, கொசுப்புழு ஒழிக்கும் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அபேட் மருந்து ஊற்றுதல், புகைமருந்து அடித்தல், வடிகால் சுத்தம் செய்தல், நிலவேம்பு கஷாயம் வழங்குதல் நடத்தப்பட்டது.

இந்த பணிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து பணிகளை துரிதப் படுத்தவும் அறிவுரை வழங்கினார். கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். குடிநீரில் குளோரின் அளவு ஆய்வு செய்து குடிநீர் வழங்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மனோகரன், செயல் அலுவலர் சுந்தர்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story