‘வரதட்சணை வழங்கினால் தான் அழகற்ற பெண்களுக்கு திருமணம் நடக்கும்’ மாணவியின் முகநூல் பதிவால் பரபரப்பு


‘வரதட்சணை வழங்கினால் தான் அழகற்ற பெண்களுக்கு திருமணம் நடக்கும்’ மாணவியின் முகநூல் பதிவால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Oct 2017 5:15 AM IST (Updated: 22 Oct 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

‘வரதட்சணை வழங்கினால் தான் அழகற்ற பெண்களுக்கு திருமணம் நடக்கும்‘ என்று பெங்களூரு மாணவியின் முகநூல் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

இது, அந்த மாணவி படிக்கும் தனியார் கல்லூரி வழங்கிய ஆய்வு குறிப்பில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் பரவுகிறது.

இந்தியாவில் வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். இருப்பினும், திருமணத்தின்போது வரதட்சணை வாங்கப்படுவதும், கொடுக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சில வேளைகளில் வரதட்சணை பிரச்சினை உயிரையும் காவு வாங்கி வருகிறது. இதனால், வரதட்சணை பிரச்சினையை அடியோடு ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் கலை மற்றும் வணிகவியல் கல்லூரி ஒன்றில் பி.ஏ. சமூகவியல் படிப்பு பயிலும் மாணவி ஒருவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ஆய்வு குறிப்பு ஒன்றின் பக்கத்தை பதிவிட்டு உள்ளார். அதில், கூறி இருப்பதாவது:–

* அதிகளவில் வரதட்சணை கொடுப்பதால் அழகற்ற பெண்களுக்கு திருமணம் நடக்கும்.

* வரதட்சணை கொடுப்பதினால் நல்ல, அழகானவர்கள் கணவராக வருவதுடன், திருமணத்துக்கு விருப்பம் இல்லாதவர்களையும் வரதட்சணையால் கவர்ந்து திருமணம் செய்து கொள்ளலாம்.

* திருமணம் ஆன புதிய தம்பதியின் வாழ்க்கைக்கு வரதட்சணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில நேரங்களில் சுய தொழில் தொடங்கவும் உதவியாக இருக்கலாம்.

* வரதட்சணை கொடுப்பது, ஏழை மற்றும் தகுதி வாய்ந்த ஆண்களுக்கு மேல்படிப்பு படிக்க உதவும்.

* வரதட்சணை கொடுப்பதால் திருமண பெண்ணின் அந்தஸ்தை உயர்வாக காட்டலாம். அத்துடன், கணவரிடம் இருந்து தொடர்ச்சியாக அன்பையும் பெறலாம். ஏழை பெண்களால் அதிகளவில் வரதட்சணை கொடுக்க முடியாததால் இந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காது.

* வரதட்சணை குடும்பத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை நிலைநாட்டும்.

* வரதட்சணை கொடுப்பதன் மூலம் வசதி படைத்தவர்களை திருமணம் செய்ய முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன், அவர் பயிலும் கல்லூரியில் படித்து வருபவர்களுக்கு வழங்கிய ஆய்வு குறிப்பில் இந்த தகவல்கள் இடம்பெற்று இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலா வருகின்றன. இதுகுறித்து, அந்த கல்லூரியின் பேராசிரியர் கிரண் ஜீவன் கூறுகையில், ‘சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுபோன்ற தகவல்கள் கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெறவில்லை‘ என்றார்.

மராட்டியத்தில் 12–ம் வகுப்பு சமூக அறிவியலில் ஒரு பாடத்தில், ‘அழகற்ற மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு திருமணம் நடப்பது சிரமம். இத்தகைய சில பெண்களுக்கு திருமணம் நடந்தால் மணமகன் வீட்டில் அதிகளவில் வரதட்சணை கேட்பார்கள். ஆனால் சில பெண்களின் பெற்றோரால் வரதட்சணை கொடுக்க முடியாத நிலை உள்ளது‘ என கூறப்பட்டு இருந்த கருத்து அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபற்றி மராட்டிய மாநில அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த நிலையில் ‘வரதட்சணை வழங்கினால் தான் அழகற்ற பெண்களுக்கு திருமணம் நடக்கும்‘ என்று பெங்களூரு மாணவி முகநூலில் பதிவிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story