மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கு: திருமணம் முடிந்த புதுப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை
மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில், திருமணம் முடிந்த 4–வது நாளில் புதுப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
திருச்சி,
திருச்சி கோட்டை பகுதி பட்டவர்த் ரோட்டை சேர்ந்தவர் முத்துரத்தினாவதி (வயது 80). இவரது வீட்டின் மாடியில் திவ்யபிரியா (25) என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்தார். திவ்யபிரியா திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக பணியாற்றினார்.
இவர் வாடகைக்கு குடியிருந்தபோது, வீட்டை பராமரிப்பது தொடர்பாக இவருக்கும், முத்துரத்தினாவதிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 2–2–2015 அன்று முத்துரத்தினாவதியின் மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் வெளியே சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்த முத்துரத்தினாவதி மாடிப்பகுதிக்கு சென்றார்.
அங்கு திவ்யபிரியா செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த அவர் ‘நீ தொடர்ந்து செல்போனில் பேசுவது குறித்து உனது அம்மாவிடம் கூறுகிறேன்’ என கூறி கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த திவ்யபிரியா, கீழ்பகுதிக்கு வந்த முத்துரத்தினாவதியை கீழே தள்ளி வயிற்றில் ஒரு இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்தார். கொலையை மறைக்க நாடகம்
மேலும், இந்த கொலையை மறைக்க திட்டமிட்ட அவர் முத்துரத்தினாவதி அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 8½ பவுன் நகைகளை கழற்றி சாக்கடை கால்வாயில் வீசினார். பின்பு கொள்ளையர்கள் வீடு புகுந்து முத்துரத்தினாவதியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றதாக அவரது மகன் மற்றும் மருமகளிடம் நாடகம் ஆடினார்.
இதுபற்றி கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சம்பவம் நடந்த வீடு அமைந்துள்ள தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் திவ்யபிரியா குற்றவாளி என உறுதி செய்தனர்.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது திருச்சி மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட திவ்யபிரியாவுக்கு அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்காக 10 வருடம் சிறைத்தண்டனை, ரூ.1000 அபராதம், கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம், நகைகளை கொள்ளையடித்ததற்காக 7 வருடம் சிறைத்தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்தும், தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டீன் தீர்ப்பு கூறினார்.
இதனை தொடர்ந்து திவ்யபிரியா திருச்சி மகளிர் தனி சிறையில் அடைக்கப்பட்டார். திவ்யபிரியாவுக்கு 3 நாட்களுக்கு முன்பு தான் காதல் திருமணம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.