கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்க நிர்வாகி கொலை: 3 பேருக்கு ஆயுள்தண்டனை
கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை,
நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த குமாரபாண்டி என்பவர் கடந்த 2006–ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். அவரது கொலையில், அப்பகுதியின் கேபிள் டி.வி. ஆபரேட்டர் சங்க நிர்வாகியான முகமது மைதீன் (வயது 55) என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக குமாரபாண்டி தரப்பினர் கருதினர். இதனையடுத்து பழிக்குப்பழி வாங்கும் வகையில் அவர் 2009–ம் ஆண்டில் வெட்டி கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குபதிவு செய்து, தென்காசி பசும்பொன்நகரை சேர்ந்த முருகன்(30), தம்பிரான் என்ற கிருஷ்ணன்(24), பொன்னையா (25) உள்பட சிலரை கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரையில் உள்ள தென்மாவட்ட வகுப்புவாத கலவர வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவில், முருகன் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பல்கீஸ் தீர்ப்பளித்தார். 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.