மதுரை செக்கானூரணி அருகே இருதரப்பினர் மோதல்: போலீஸ் குவிப்பு
மதுரை செக்கானூரணி அருகே உள்ள பன்னியான் கிராமத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை செக்கானூரணி அருகே உள்ளது பன்னியான் கிராமம். இங்குள்ள காளியம்மன் கோவில் திருவிழாவில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. சுகன்யா சமாதான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அமைதியான முறையில் திருவிழா கொண்டாட அனுமதி வழங்கினார். அதைத் தொடர்ந்து கோவில் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இருதரப்பினரும் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினர் இடையே மோதல் உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரின் வீடுகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பயந்துபோன சிலர், அங்குள்ள மலை மீது ஏறி போராட்டம் நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 50–க்கும் மேற்பட்ட வீடுகள், 10 மோட்டார் சைக்கிள்கள், 15 ஆட்டோக்கள் சூறையாடப்பட்டன. இதுபோல் அந்த பகுதியில் ஏராளமான ஆடுகளும், மாடுகளும் திருட்டுபோனது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் விரைந்து வந்து கிராமம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் மகன் சிங்(வயது 31), மூவேந்திரன்(55), ராஜ்குமார்(25), ராஜேஷ்குமார்(29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி அவர்களது உறவினர்கள் மதுரை– தேனி மெயின் ரோட்டில் நேற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே பன்னியான் கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் அங்குள்ள மண்டபங்களில் முகாமிட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, அந்த பகுதியை சேர்ந்தவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளருமான அய்யங்காளை கூறும்போது, இருதரப்பினரிடையே மோதல் சம்பவம் நடந்தபோது, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் வேண்டும் என்றே போலீசார் கால தாமதமாக வந்தனர். நாங்கள் எல்லோரும் உயிருக்கு பயந்து வீடுகளை பூட்டி வீடு அருகில் இருந்த மலை மேல் ஏறி அமர்ந்திருந்தோம். உள்ளூர் ஆட்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஆட்கள் வந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். 50–க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் சேதம் அடைந்துள்ளது. வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் ராஜி என்பவர் கூறும்போது, ஜாதியை கூறி இழிவாக பேசி தகராறு செய்கிறார்கள். இதுபோன்ற நிலைமை தொடர்ந்து நீடித்தால் எங்களால் உயிர்வாழ முடியாத நிலை உருவாகும். மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பலமுறை புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் காலங்களிலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான போராட்டங்களை நடத்துவோம் என்றார்.