வரதட்சணை கொடுமையால் வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை கணவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையம் முற்றுகை


வரதட்சணை கொடுமையால் வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை கணவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 1 Nov 2017 4:45 AM IST (Updated: 1 Nov 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்த பெண்ணின் கணவரை கைது செய்ய வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த ரங்கன் என்பவரின் மகள் சுந்தரி (வயது30). 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூரை சேர்ந்த சத்யநாராயணன் என்பவரின் மகன் அய்யப்பனுக்கும் (34), சுந்தரிக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. திருமணமான 3 மாதங்களிலேயே அய்யப்பன் வரதட்சணை கேட்டு சுந்தரிக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் சுந்தரி கடந்த 24–ந்தேதி தாய் வீட்டிற்கு வந்து தந்தையிடம், பணம் கொடுக்கவில்லை என்றால் எனது கணவர் தற்கொலை செய்துகொள்வதாக வி‌ஷத்தை வைத்துக்கொண்டு மிரட்டுகிறார் என்று கூறினார். குழந்தை பிறந்து 3 மாதத்தில் இப்போது தான் சீர் பொருட்கள் அனுப்பிவைத்தோம். மீண்டும் பணம் கேட்டால் எங்களிடம் எங்கே இருக்கிறது என்று தந்தை கூறிவிட்டார்.

இதனால் கணவன் வீட்டுக்கு சென்ற சுந்தரி 25–ந்தேதி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அய்யப்பனின் தந்தை சத்யநாராயணன், ரங்கன் வீட்டிற்கு சென்று உங்களது மகள் மயங்கிய நிலையில் இருப்பதாக கூறினார். சுந்தரியின் பெற்றோர் வருவதற்குள் சுந்தரியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுந்தரி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் நேற்று ரங்கன், ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதால் எனது மகள் தற்கொலை செய்துகொண்டார் என அய்யப்பன் மீது புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது.

அதோடு போலீசார் அய்யப்பனையும் கைது செய்யாததால் நேற்று 100–க்கும் மேற்பட்ட பெண்கள் சுந்தரியின் 3 மாத குழந்தையுடன் திருப்போரூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வரதட்சணை தொடர்பான வழக்கு என்பதால் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ.வை சந்தித்து முறையிடும்படி கூறினார்கள். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ.வை சந்திக்க புறப்பட்டு சென்றனர்.


Next Story