கூடலூரில் அடிக்கடி நிகழும் விபத்து: தமிழக– கர்நாடகா பஸ்கள் உரசியபடி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
கூடலூரில் தமிழக– கர்நாடகா அரசு பஸ்கள் உரசிக்கொண்டு நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கூடலூர்,
கேரளா– கர்நாடகா மற்றும் தமிழக எல்லைகள் இணையும் பகுதியில் கூடலூர் நகரம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கூடலூர் வழியாக ஊட்டி, கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் உள்ளூர் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் இயங்குகின்றன. நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடலூர் நகர பகுதியில் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனிடையே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் நடுவில் போக்குவரத்து போலீசார் தடுப்பு கம்பிகளை வைத்துள்ளதால் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கூடலூர் நகர பகுதியில் விபத்துகள் அடிக்கடி நிகழ்கிறது. சில வாரங்களுக்கு முன்பு கூடலூர்– மைசூர் சாலையில் மரப்பாலம் என்ற இடத்தில் லாரியும், கேரள அரசு பஸ்சும் ஒன்றுக்கொன்று உரசி கொண்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு கூடலூர் நோக்கி வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் அதிகளவில் விபத்தில் சிக்கி வருகிறது.
ஊட்டி– கூடலூர் சாலை பள்ளத்தாக்கான மலைப்பாதை என்பதால் 2–வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் முக்கிய இடங்களில் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பலகைகளை பொருத்தி வைத்துள்ளனர். ஆனால் வெளியூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. இதனால் மலைப்பாதையில் பிரேக்கை பிடித்தவாறு வாகனங்களை ஓட்டுகின்றனர். இறுதியாக கூடலூர் நகருக்குள் வரும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளில் சிக்கி வருகிறது.
நேற்று முன்தினம் புதிய பஸ் நிலைய பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி பலத்த சேதம் அடைந்தது. நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குண்டல்பேட் சென்ற தமிழக பஸ், ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு சென்ற கர்நாடகா அரசு பஸ் ஒன்றன்பின் ஒன்றாக கூடலூர் வந்தது. பின்னர் சக்தி விநாயகர் கோவில் அருகே வந்த போது 2 பஸ்களும் ஒன்றுடன் ஒன்றாக பலமாக உரசியது. இதனால் பஸ்களில் அமர்ந்திருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர்.
பின்னர் 2 பஸ்களும் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. மேலும் டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் நடுரோட்டில் நின்ற பஸ்களை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து சுமார் ½ மணி நேரத்துக்கு பிறகு பஸ்கள் அங்கிருந்து சென்றன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே போலீசார், இனி வரும் காலங்களில் மலைப்பாதையில் அதிவேகத்தில் வரும் வாகனங்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.