ரூ.195 கோடி செலவில் கட்டப்பட்ட கோவை காந்திபுரம் மேம்பாலம் இன்று திறப்பு முதல்–அமைச்சர் திறந்து வைக்கிறார்
கோவை காந்திபுரத்தில் ரூ.195 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.
கோவை,
கோவை காந்திபுரத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.195 கோடி செலவில் 2 அடுக்குகள் கொண்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
தற்போது டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள பார்க்கேட் சிக்னல் அருகில் இருந்து ஆம்னி பஸ் நிலையம் வரை முதற்கட்ட மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்து உள்ளது. அதுபோன்று காந்திபுரம் 100 அடி ரோட்டில் இருந்து சின்னச்சாமி ரோட்டில் உள்ள மின்மயானம் வரை 2–வது கட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முதற்கட்ட மேம்பாலம் பணி முடிந்ததால், அதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு முதற்கட்ட மேம்பாலம் திறப்பு விழா நடக்கிறது.
விழாவுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை வகிக்கிறார். நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரங்கன் கலந்து கொண்டு பேசுகிறார். கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் வரவேற்கிறார்.
விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து பேசுகிறார். இதற்காக அவர், சேலத்தில் இருந்து கார் மூலம் மாலை 3 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் 3.30 மணிக்கு விழா நடக்கும் மேடைக்கு செல்கிறார். பின்பு விழா முடிந்ததும், கார் மூலம் கோவை விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
கோவைக்கு முதல்–அமைச்சர் வருவதையொட்டி கோவை–அவினாசி ரோடு, மத்திய சிறை ரோடு உள்பட பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் சார்பில் முதல்–அமைச்சரை வரவேற்கும் வகையில் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு உள்ளதுடன், போர்டுகளும் வைக்கப்பட்டு உள்ளன. அதுபோன்று மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
கோவைக்கு முதல்–அமைச்சர் வருவதையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை மாநகர துணை கமிஷனர்கள் லட்சுமி, சுஜித்குமார், தர்மராஜன், பெருமாள் ஆகியோர் மேற்பா£வையில், ஒரு கூடுதல் துணை கமிஷனர் மற்றும் 16 உதவி கமிஷனர்கள் என்று 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விழாவுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.