அரூரில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 2 பேர் வீடுகளில் நகை, பணம் திருட்டு


அரூரில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 2 பேர் வீடுகளில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 1 Nov 2017 4:30 AM IST (Updated: 1 Nov 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

அரூரில் முன்னாள் எம்.எல்.ஏ. வீடு உள்பட 2 பேர் வீடுகளில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பூட்டை உடைத்து புகுந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டனர்.

அரூர்,

பர்கூர், பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆறுமுகம். இவர் தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க நகரில் தற்போது குடியிருந்து வருகிறார். இவருடைய மகன் அறிவுச்செல்வன் கிருஷ்ணகிரியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த புதிய வீடு திறப்பு விழாவுக்காக ஆறுமுகம் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

பின்னர் அவர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் 5 உண்டியல்களில் இருந்த ரூ.1 லட்சம், பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம், 10 பவுன் நகைகள், 4 வெளிநாட்டு கைக்கெடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோல் ஆறுமுகம் வீட்டின் முன்புறம் உள்ள வீட்டில் குடியிருப்பவர் சரோஜா. இவர் வீட்டை பூட்டி விட்டு ஊத்தங்கரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சரோஜா வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த ஒரு பவுன் நகை, ரூ.13 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து அரூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் ஒரே நாளில் இந்த துணிகர செயலில் ஈடுபட்டு உள்ளனர். வீடுகளில் திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Related Tags :
Next Story