இரணியல் அருகே அடுத்தடுத்து துணிகரம் வீட்டில் ரூ.2 லட்சம் மின்சாதனங்கள் கொள்ளை


இரணியல் அருகே அடுத்தடுத்து துணிகரம் வீட்டில் ரூ.2 லட்சம் மின்சாதனங்கள் கொள்ளை
x
தினத்தந்தி 1 Nov 2017 4:30 AM IST (Updated: 1 Nov 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே வீட்டில் ரூ.2 லட்சம் மின்சாதன பொருட்களை கொள்ளையடித்து விட்டு, தபால் நிலையம் மற்றும் கிராமநிர்வாக அலுவலகத்திலும் கைவரிசை காட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

அழகியமண்டபம்,

திங்கள்சந்தை அருகே மேலகட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவருடைய மகன் ஜெயசங்கர்(வயது30), வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர், குருந்தன்கோட்டில் உள்ள தனது அண்ணன் ஜெயராமனின் மேற்பார்வையில் மேலகட்டிமாங்கோட்டில் புதிதாக வீடு கட்டி வந்தார்.

 தற்போது அந்த வீட்டில் வயரிங் பணி நடைபெற்று வந்தது. இதற்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்களை வாங்கி வீட்டிற்குள் வைத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அந்த வீட்டை ஜெயராமன் பார்வையிட சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த மின்சாதனங்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. யாரோ மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மின்சாதனங்கள் மற்றும் கட்டுமான பணிக்கு வைத்திருந்த இரும்பு கம்பியையும் எடுத்து சென்று உள்ளனர். 

இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள குருந்தன்கோடு ‘பி‘ கிராம அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கு வைத்திருந்த கொடி நாள் தின வசூல் பணம் 4 ஆயிரத்தையும் கொள்ளை அடித்துள்ளனர். மேலும், மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கு புகுந்து அங்கிருந்த மேஜையை உடைத்துள்ளனர். பின்னர், அதில் பணம் இல்லாததால் சென்று விட்டனர்.

இந்த சம்பவங்கள் குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குளச்சல் உதவி சூப்பிரண்டு சாய்சரன் தேஜஸ்வி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது கட்டுமான பணி நடைபெற்ற வீட்டில் காணாமல் போன இரும்பு கம்பியை வைத்து மர்ம நபர்கள் கிராம அலுவலகம் மற்றும் தபால் நிலையத்தின் பூட்டையும் உடைக்க பயன்படுத்தியது தெரியவந்தது. போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவுசெய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story