சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு


சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Nov 2017 10:30 PM GMT (Updated: 1 Nov 2017 6:16 PM GMT)

சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் லதா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சல் நிலைமை குறித்து டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் குழந்தைகள் உள்பட 8 பேர் அடுத்தடுத்து பலியாகினர். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஒன்றியங்கள் வாரியாக கலெக்டர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் சுகாதாரமற்று வளாகங்களை வைத்திருக்கும் கடை, வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று கலெக்டர் லதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலில் டெங்கு சிறப்பு பிரிவில் அவர் ஆய்வு நடத்தினார். பின்னர் அங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவோரிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர்களிடம் டெங்கு காய்ச்சல் வராமல் எவ்வாறு தடுக்கலாம் என்று விழிப்புணர்வு கருத்துகளை தெரிவித்தார்.

பின்னர் டாக்டர்களின் வருகை பதிவேட்டை கலெக்டர் சரி பார்த்தார். மேலும் சிங்கம்புணரி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டியிடம் கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் மக்களுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலவேம்பு கசாயத்தை அருந்தி, சோதனை செய்தார்.

இந்த ஆய்வின்போது, டாக்டர்கள் செந்தில்வேலன், செந்தில், கண்ணன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு, தாசில்தார் தனலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வினோத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, பிரதீப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story