தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய இந்து முன்னணி பிரமுகர் கைது
கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆனந்தஜோதி என்பவரின் மகன் ரஞ்சித் தனியார் நிறுவன ஊழியர்.
துடியலூர்,
கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆனந்தஜோதி என்பவரின் மகன் ரஞ்சித் (வயது 19). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி இளைஞரணி மாவட்ட பொறுப்பாளர் படையப்பா என்ற முத்துக்குமார் (37) என்பவருக்கும் இடையே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று வெற்றிலைகாளிபாளையம் அருகே ஏ.கே.எஸ். நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த ரஞ்சித்திடம், அங்கு வந்த முத்துக்குமார் திடீரென தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு முத்துக்குமார் தப்பிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித்தை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார், நேற்று முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.