ஈரோடு அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து; எந்திரங்கள் கருகின, பஞ்சு–நூல் நாசம்


ஈரோடு அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து; எந்திரங்கள் கருகின, பஞ்சு–நூல் நாசம்
x
தினத்தந்தி 1 Nov 2017 10:15 PM GMT (Updated: 1 Nov 2017 8:23 PM GMT)

ஈரோடு அருகே நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் எந்திரங்கள் கருகின. ரூ.50 லட்சம் மதிப்புள்ள பஞ்சு–நூல் எரிந்து நாசமாகின.

பவானி,

ஈரோடு அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரி அருகே ஒரு தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. ஈரோட்டை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர் இந்த நூற்பாலையை நடத்தி வருகிறார். திருப்பூரில் இருந்து கழிவு பஞ்சுகள் இறக்குமதி செய்யப்பட்டு, அதில் இருந்து நூல் தயாரிக்கும் பணி இங்கு நடைபெற்று வருகிறது. சுமார் 45 தொழிலாளர்கள் 2 சிப்டு முறையில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 2½ மணி அளவில் நூற்பாலையில் மின் கசிவு ஏற்பட்டு பஞ்சு அரைக்கும் இயந்திரம் அருகே திடீரென தீப்பிடித்தது. உடனே இரவு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றார்கள். ஆனால் தீ மளமளவென எந்திரங்களின் மீது பற்றியது. மேலும் அருகே இருந்த கழிவு பஞ்சுகள், நூல்கள் மீதும் பற்றி எரியத்தொடங்கியது. இதனால் உள்ளே வேலை பார்த்த 25–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே ஓடிவந்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கும், நூற்பாலையின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தார்கள்.

தகவல் கிடைத்த உடன் பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றார்கள். நூற்பாலைக்குள் அதிக அளவில் பஞ்சும், நூலும் இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. நூற்பாலையின் சிமெண்டு ஓடுகள் வெடித்து பறந்துவிழுந்தன. சுமார் 1 மணி நேரம் போராடியும் தீ கட்டுக்குள் வரவில்லை. அதனால் தீயணைப்பு அதிகாரி ஈரோடு, அந்தியூர், பெருந்துறை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து 3 இடங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் ஒன்று சேர்ந்து நாலா புறமும் தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள்.

பவானி காலிங்கராயன்பாளையத்தில் இருந்து தனியார் தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன. காலை 6 மணி அளவில் சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

தீவிபத்தில் நூற்பாலைக்குள் இருந்த அரவை எந்திரம், நூல் எந்திரங்கள் அனைத்தும் கருகி சேதமடைந்தன. சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள், நூல்கள் எரிந்து நாசமடைந்துவிட்டதாக தெரியவருகிறது. மேலும் கட்டிடங்கள் வெடித்து விரிசல் ஏற்பட்டும், மேற்கூரை சிமெண்டு ஓடுகள் உடைந்தும் உருக்குலைந்துவிட்டன.

இந்தவிபத்து குறித்து சித்தோடு போலீசாரும், பவானி தீயணைப்பு நிலைய அதிகாரியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகாலை நேரத்தில் நூற்பாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் சித்தோடு பகுதியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story