எத்தகைய இடையூறுகள் வந்தாலும் மக்கள் நலனை பேணிக்காப்போம்; நாராயணசாமி உறுதி


எத்தகைய இடையூறுகள் வந்தாலும் மக்கள் நலனை பேணிக்காப்போம்; நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 2 Nov 2017 12:00 AM GMT (Updated: 1 Nov 2017 8:45 PM GMT)

எத்தகைய இடையூறுகள் வந்தாலும் மக்கள் நலனை பேணிக்காப்போம் என்று விடுதலை நாள் உரையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடந்த விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அவர் தனது விடுதலை நாள் விழா உரையில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நேரிடையான ஆட்சி 1947–ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. பிரெஞ்சியர் வசமிருந்த சந்திரநாகூர் 1950–ம் ஆண்டு விடுதலை பெற்று மேற்கு வங்கத்துடன் இணைந்துவிட்டது. நாம் நம்முடைய வீரம் செறிந்த விடுதலை போராட்டத்தின் வாயிலாக 1954–ம் ஆண்டு நவம்பர் முதல் நாளன்று விடுதலை பெற்றோம்.

இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடும் வகையில் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் நம்மிடம் விட்டுவிட்டு எந்த இடத்தில் இருந்து கப்பலில் ஏறி சென்றார்களோ, வங்கக்கடலின் அதே இடத்தில் இன்று நமது தேசியக்கொடியை ஏற்றி வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

புதுவை விடுதலைக்கு வித்திட்ட வீர மறவர்களையும் அவர்களது தியாகங்களையும் நினைத்து போற்றுவது நமது கடமையாகும். புதுவை மாநிலம் கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருப்பதை பார்க்கிறோம். குறிப்பாக தென்னிந்திய அளவில் கல்விக்கேந்திரமாக மாறியுள்ளது. இதற்கு காரணம் கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவிலேயே முதல்முறையாக பள்ளி குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் வழங்கும் திட்டம் ராஜீவ்காந்தி பெயரால் தொடங்கப்பட்டது. இடையில் நிறுத்தப்பட்ட இந்த திட்டத்தை பெங்களூரில் உள்ள சத்தியசாய் அறக்கட்டளையின் உதவியோடு மீண்டும் தொடங்கியுள்ளோம். தனியார் தொண்டு நிறுவனம் அட்சய பாத்திரா அமைப்பின் உதவியோடு மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு திட்டத்தை சிறப்பாக மெருகேற்றி நிறைவேற்ற உள்ளோம்.

புதுவை மாநிலத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் முறைப்படுத்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. எங்கள் அரசின் இந்த முயற்சிக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பும், பாராட்டும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி ஆன்மிக தலங்களை மேம்படுத்துவதற்காக ஆன்மிக சுற்றுலா தொகுப்பின்கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம் ரூ.107 கோடி அளித்துள்ளது.

புதுச்சேரியை வாரம் முழுவதற்குமான ஒரு சுற்றுலா தலமாக மாற்றியமைக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இவ்வாண்டில் கடற்கரை சுற்றுலா என்ற தொகுப்பில் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் விடுபட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கான நிதிக்கொடை வேண்டி ஒரு கருத்துரு விரைவில் மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ரூ.1,828 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு அந்த பணிகள் தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தின்கீழ் அதிநவீன பஸ் நிலையம், மருத்துவமனைகள் நவீனமயம், மின்சார வினியோகம், பல்நோக்கு வாகன நிறுத்துமிடம், சாலைகளில் தனி மதிவண்டி பாதை, பெரிய கால்வாய் சீரமைப்பு, அதில் படகு சேவை, கடற்கரையை அழகுபடுத்துதல் போன்ற பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

புதுச்சேரியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அதேவேளையில் புதுச்சேரி மாநில மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் நாங்கள் முனைப்புகாட்டி வருகிறோம். நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முடக்குவதிலும் எத்தகையை இடையூறுகள் வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு அனைத்து தரப்பு மக்களின் நலனை பேணிக்காப்பதிலும் எங்களது அரசு உறுதியாக இருக்கிறது. எங்கள் அரசு மக்கள் அரசு, மக்களுக்கான அரசு என்பதை கடந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் நிரூபித்து காட்டி இருக்கிறோம்.

பயன்கருதாத பலரது தியாகத்தால் நமக்கு இந்த விடுதலை கிடைத்துள்ளது. இதன் பலன்கள் மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பது அந்த தியாக தலைவர்களின் கனவு. அதை நிறைவேற்றித் தருவது எங்களது கடமை. எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து மக்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக, வளமாக, நலமாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பதை கடமையாக ஏற்று நாங்கள் செயல்பட்டு வருகிறோம். வருங்காலங்களிலும் இதே உறுதியோடு செயல்படுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story