சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டைக்கு தஞ்சை வழியாக 2 புதிய ரெயில்கள் அறிவிப்பு


சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டைக்கு தஞ்சை வழியாக 2 புதிய ரெயில்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2017 10:30 PM GMT (Updated: 1 Nov 2017 9:14 PM GMT)

சென்னையில் இருந்து தஞ்சை வழியாக திருநெல்வேலி, செங்கோட்டைக்கு 2 புதிய ரெயில்கள் விரைவில் இயக்கப்படுகிறது.

தஞ்சாவூர்,

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் முன்பு தஞ்சை வழியாக இயக்கப்பட்டது. பின்னர் விழுப்புரம்- திருச்சி இடையே ரெயில் தண்டவாளம் அமைக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான ரெயில்கள் அந்த வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை வழியாக முன்பு இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் அடுத்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி முதல் திருவாரூர் வழியாக இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில் தஞ்சைக்கு வராது. எனவே மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வழியாக இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சை வழியாக சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டைக்கு புதிய ரெயில்கள் விடப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் (வண்டி எண்16191) சென்னை தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 3.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல்ரோடு, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தஞ்சைக்கு அதிகாலை 6.30 மணிக்கு வரும்.

மறுமார்க்கமான திருநெல்வேலியில் இருந்து (வண்டி எண் 16192) மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தை மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் தஞ்சைக்கு நள்ளிரவு 12.45 மணிக்கு வரும்.

இதே போல தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. வண்டி எண் 16189 காலை 7 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு 10.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் தஞ்சைக்கு மதியம் 1 மணிக்கு வரும். மறுமார்க்கமான செங்கோட்டையில் இருந்து (வண்டி எண் 16190) காலை 6 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்ப கோணம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக இயக்கப்படுகிறது. தஞ்சைக்கு இந்த ரெயில் தஞ்சைக்கு மதியம் 2.20 மணிக்கு வரும். இந்த ரெயில்கள் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல தற்போது தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு தஞ்சை வழியாக இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் அக்டோபர் 31-ந்தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரெயில் மேலும் 1 மாதம் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story