அரசின் தொடக்கப்பள்ளிகளில் புதிதாக 4 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

அரசின் தொடக்கப்பள்ளிகளில் புதிதாக 4 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மந்திரி தன்வீர்சேட் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த கன்னட ராஜ்யோத்சவா விழாவில் பள்ளி கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் கலந்து கொண்டு பேசியதாவது:–
கர்நாடகத்தில் அரசின் தொடக்கப்பள்ளிகளுக்கு புதிதாக 4 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக பொது நுழைவு தேர்வு வருகிற 11–ந் தேதி நடத்தப்படுகிறது. இந்த நியமன பணிகள் அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும். உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் நூலக ஊழியர்களை நியமனம் செய்ய சில பிரச்சினைகள் உள்ளன.இந்த பிரச்சினைகளை தீர்க்க நியமன விதிமுறைகளில் சில திருத்தங்களை செய்ய முடிவு செய்துள்ளோம். தரமான கல்வியை போதிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளை பலப்படுத்த கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா அரசுக்கு வழங்கியுள்ள 21 சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை அமல்படுத்தப்படும். இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
கர்நாடக கல்வி வரலாற்றில் முதல் முறையாக பள்ளிகள் திறப்பதற்கு முன்பே பாடப்புத்தங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து, அதற்கான பாடப்புத்தகங்களை குறித்த காலத்தில் குழந்தைகளுக்கு வழங்கியுள்ளோம்.அரசு பள்ளிகளில் குழந்தைகளின் சீருடைக்கு கைத்தறி நெசவாளர்கள் நெய்யும் துணிகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்கள் நெய்யும் துணிகளை முழுமையாக கொள்முதல் செய்ய அரசு தயாராக உள்ளது. குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் போதிக்கும் திறனை கண்டறிய திறனாய்வு தேர்வு கடந்த ஆண்டு 4–ம் வகுப்பு முதல் 6–ம் வகுப்பு வரை நடைபெற்றது.
இந்த தேர்வு இந்த ஆண்டு 4–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு முதல், பெண் குழந்தைகளுக்கு சீருடை சுடிதாருக்கு மாற்றப்பட்டுள்ளது. 8–ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் வழங்குகிறோம். அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கணினி பயிற்சி வழங்குகிறோம்.இவ்வாறு மந்திரி தன்வீர்சேட் பேசினார்.