ரூ.200 கோடி நிலமோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு 6 ஆண்டுகள் ஜெயில்


ரூ.200 கோடி நிலமோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு 6 ஆண்டுகள் ஜெயில்
x
தினத்தந்தி 2 Nov 2017 4:15 AM IST (Updated: 2 Nov 2017 12:23 PM IST)
t-max-icont-min-icon

ரூ.200 கோடி நிலமோசடி வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி ஆலந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆலந்தூர்,

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அமீது. இவர் கடந்த 2006–ம் ஆண்டு துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், ‘கடந்த 2004–ம் ஆண்டு நானும், எழும்பூரைச் சேர்ந்த தன்ராஜ் கோச்சார், அடையாறைச் சேர்ந்த ராபூப் ஆகியோரும் சேர்ந்து கட்டுமான தொழில் நிறுவனம் தொடங்கினோம். இதில் சொத்துகளை வாங்க நான் ரூ.1 கோடியே 71 லட்சம் முதலீடு செய்தேன்.

ஆனால், சிறுசேரி மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் 33 ஏக்கர் நிலத்தை நிறுவனத்தின் பெயரில் வாங்காமல் தனது பெயரிலும், தனது மகன்கள், மருமகள்கள், பேரன்கள் பெயரிலும் தன்ராஜ் கோச்சார் வாங்கியுள்ளார். இதுகுறித்து கேட்டபோது என்னை மிரட்டினார்’ என்று கூறியிருந்தார். மேற்படி நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.200 கோடி ஆகும்.

அதன்பேரில் துரைப்பாக்கம் போலீசார் தன்ராஜ் கோச்சார் (72), அவரது மகன்கள் இந்தர்சந்த் (52), சுரேஷ்குமார் (50), நவீன்குமார் (45), ரமேஷ்குமார் (50), மருமகள்கள் ராஜ்குமாரி (48), அனிதா (50), சரளா (52), பேரன் ஜிதேஷ்குமார் (30), மற்றொரு சிறார் பேரன், இவர்களுக்கு உடந்தையாக இருந்த கோபால்ராவ் ஆகியோர் மீது 409 மற்றும் 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. வழக்கு கடந்த 11 ஆண்டுகளாக ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில் கோபால்ராவ் தலைமறைவாகி விட்டார். சிறார் வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. மற்ற 9 பேர் மீதான வழக்கு ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் தீர்ப்பு வழங்கினார். நீதிபதி தனது தீர்ப்பில், நவீன்குமார் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றும், தன்ராஜ் கோச்சார் உள்ளிட்ட 8 பேருக்கும் தலா 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.


Next Story