சித்தராமையா தலைமையிலான ‘கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது’ அமித்ஷா குற்றச்சாட்டு


சித்தராமையா தலைமையிலான ‘கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது’ அமித்ஷா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Nov 2017 3:00 AM IST (Updated: 3 Nov 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பா.ஜனதா சார்பில் ‘மாற்றத்திற்கான பயணம்’ அமித்ஷா தொடங்கி வைத்தார்

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா சார்பில் “மாற்றத்திற்கான பயணம்” என்ற பிரசார பயணத்தை பெங்களூருவில் நேற்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசுகையில் சித்த ராமையா அரசு ஊழலில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளதாக குற்றம்சாட்டினார்.

கர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆண்டு(2018) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

மாற்றத்திற்கான பயணம்

இந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருக்கிறார். இதற்காக மாற்றத்திற்கான பயணம்(பரிவர்த்தனா யாத்திரை) என்ற பெயரில் எடியூரப்பா பிரசார பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்திற்காக ஒரு சொகுசு பஸ்சை ரூ.90 லட்சம் செலவில் பிரசார வாகனமாக வடிவமைத்து உள்ளனர். இந்த வாகனத்தில் படுக்கை, சமையல், கழிவறை, கூட்ட அரங்கம் போன்ற வசதிகள் உள்ளன. 12 பேர் அமர்ந்து அந்த பஸ்சில் பயணிக்க முடியும். இந்த பஸ் மாநிலம் முழுவதும் 224 தொகுதிகளுக்கு செல்கிறது. 74 நாட்கள் இந்த பயணம் நடைபெறும்.

அமித்ஷா தொடங்கி வைத்தார்


கர்நாடக பா.ஜனதா சார்பில் இந்த மாற்றத்திற்கான பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம் பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு மாற்றத்துக்கான பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

“கர்நாடகத்தில் மாற்றத்திற்கான பயணத்தை எடியூரப்பா மேற்கொள்கிறார். அந்த பயணத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். இந்த பயணம் 224 தொகுதிகளுக்கும் செல்லும். மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமில்லாமல் புதிய கர்நாடகத்தை உருவாக்கும் நோக்கத்தில் இந்த பயணம் அமையும். நாட்டிலேயே சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தான் ஊழல் மிகுந்த ஆட்சி. சித்தராமையா ஆட்சி ஊழலில் முதல் இடத்தில் உள்ளது. இது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. சித்தராமையா அரசு ஊழலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து உள்ளது.

ஊழலற்ற ஆட்சி நிர்வாகம்

மத்தியில் பிரதமர் மோடி பாரபட்சமற்ற, ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறார். அதே போல் கர்நாடகத்தில் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் அமர்த்தினால், அவரும் நல்லாட்சியை வழங்குவார். பெங்களூருவில் இரும்பு மேம் பாலம் அமைத்து அதில் ஊழல் செய்ய சித்தராமையா அரசு திட்டமிட்டது. இதற்கு எதிராக பா.ஜனதா போராட்டத்தை நடத்தியதால், அந்த திட்டத்தை இந்த அரசு கைவிட்டது.

ஊழலை தடுக்கும் பணியில் இங்குள்ள லோக்அயுக்தா அமைப்பு நன்றாக செயல்பட்டு வந்தது. அந்த அமைப்பின் அதிகாரத்தை பறித்து, ஊழல் தடுப்பு படையை சித்தராமையா உருவாக்கியுள்ளார். நாட்டில் உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், அரியானா, மராட்டியம் உள்பட பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் பாரபட்சமற்ற, ஊழலற்ற ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

சித்தராமையா தர முடியுமா?

கர்நாடகத்திற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.88 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கியது. ஆனால் மத்தியில் பா.ஜனதா அமைந்த பிறகு கர்நாடகத்திற்கு சுமார் ரூ.2½ லட்சம் கோடி நிதி உதவி கொடுத்துள்ளது. இதில் ரூ.1½ லட்சம் கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி செலவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை சித்தராமையா தர முடியுமா? முத்ரா திட்டத்திற்கு ரூ.3 ஆயிரத்து 900 கோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.960 கோடி, அம்ருத் திட்டத்திற்கு ரூ.4,953 கோடியை கர்நாடகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிதி மக்களுக்கு முறையாக சென்று அடையவில்லை. இதில் சித்தராமையா அரசு ஊழல் செய்துள்ளது.

நவம்பர் 1-ந் தேதி ராஜ்யோத்சவா விழாவை கர்நாடக மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதில் சித்தராமையாவுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் சித்தராமையாவோ திப்பு ஜெயந்தி கொண்டாடுவதில் தான் தீவிரமாக உள்ளார். இது சித்தராமையாவின் வாக்கு வங்கி அரசியல் ஆகும். கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற கொலைகளை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலை சம்பவங்களில் ஈடுபடுவோரை இந்த அரசு பாதுகாக்கிறது. அத்தகையவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுகிறது.

அரவணைத்து ஆட்சி நடத்துகிறார்

சித்தராமையாவுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை. பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து ஆட்சி நடத்துகிறார். சித்தராமையா, தான் ஒரு பிறப்படுத்தப்பட்ட மக்களின் தலைவர் என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் நலனுக்காக அரசியல் சாசன அந்தஸ்துடன் ஒரு ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லி மேல்-சபையில் இந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸ் கட்சி தடுத்துவிட்டது.

பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு 130 மக்கள் நல திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். இதில் ஒரு திட்டம் கூட கர்நாடகத்தில் சித்தராமையா அமல்படுத்தவில்லை. அந்த அளவுக்கு சித்தராமையா மோசமான ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறார். அதனால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய கர்நாடக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். எடியூரப்பா தொடங்கியுள்ள இந்த மாற்றத்திற்கான பயணம், சித்தராமையாவின் ஊழல் ஆட்சியை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.”

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

74 நாட்கள் பயணம்

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அனந்தகுமார், சதானந்தகவுடா, பியூஸ்கோயல், அனந்தகுமார் ஹெக்டே, ரமேஷ் ஜிகஜினகி, மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈசுவரப்பா, ஷோபா எம்.பி., முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story