நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு


நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2017 4:30 AM IST (Updated: 3 Nov 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுமார் 141 விசைப்படகுகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்த மீனவர்களில் பெரும்பாலானோர் நேற்று அதிகாலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு வேகமாக வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விசைப்படகு மீனவர்கள் பலர் அவசர, அவசரமாக தங்களது விசைப்படகை நகர்த்தினார்கள். ஆனாலும் வேகமாக வந்த இலங்கை கடற்படையினர் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வி, விஜயேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர்.

விசைப்படகுகளில் இருந்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சந்திரபோஸ் (வயது 28), தெய்வகுமார் (20), குகன் (20), பிரவீன் (21), விவேக் (22), விஜயேந்திரன் (34), செல்வநாதன் (60), முருகன் (35), பாண்டி (40) ஆகிய 9 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர்.

அதே சமயத்தில் விஜயேந்திரன் என்பவருக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகின் மீது இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகை கொண்டு மோதினார்கள். இதில் அந்த விசைப்படகு சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து மீனவர்கள் விசைப்படகை எடுத்து கொண்டு ஜெகதாபட்டினம் விசைப்படகு மீன்பிடித்தளத்திற்கு வந்தனர்.

இதேபோல மண்டபத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகையும், அதில் இருந்த மீனவர்கள் செல்வம், பால்ச்சாமி, சூசை உள்பட 4 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். மொத்தம் 13 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின் 13 மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 
1 More update

Related Tags :
Next Story