வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய பெண் உள்பட 3 பேர் கைது


வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2017 9:18 PM GMT (Updated: 2 Nov 2017 9:18 PM GMT)

திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் பூலுவப்பட்டியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் விபசாரம் நடப்பது தெரியவந்தது.

வீட்டில் இருந்த கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 25 வயது அழகியை அங்கிருந்து மீட்டனர். மேலும் அங்கிருந்த பெண் உள்பட 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் போயம்பாளையத்தை சேர்ந்த ராஜா(வயது 31), சென்னை கொளத்தூரை சேர்ந்த குமரேசன்(31), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த முத்துலட்சுமி(34) என்பதும் இவர்கள் 3 பேரும் புரோக்கராக இருந்து விபசாரம் நடத்தியதும் தெரியவந்தது.

இவர்களில் ராஜாவும், குமரேசனும் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து அந்த வீட்டில் வெளிமாநில அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விபசார தொழிலுக்கு பயன்படுத்தியதாக 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, குமரேசன், முத்துலட்சுமி ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story