ஆந்திராவில் இருந்து தேனிக்கு காரில் கடத்தப்பட்ட 180 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது


ஆந்திராவில் இருந்து தேனிக்கு காரில் கடத்தப்பட்ட 180 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2017 4:30 AM IST (Updated: 3 Nov 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து தேனிக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

ஆந்திராவில் இருந்து தேனிக்கு ஒரு காரில் கஞ்சா கடத்தி வருவதாக, தேனி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார், தேவதானப்பட்டி-வைகை அணை சாலையில் டி.வாடிப்பட்டி பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனையிட்டனர். அந்த காரில் சாக்கு மூட்டைகள் இருந்தன. அவற்றை சோதனை செய்தபோது, அவற்றில் மொத்தம் 180 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காரை ஓட்டி வந்தவர், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள குமணன்தொழுவை சேர்ந்த கோட்டைச்சாமி (வயது 34) என்றும், மற்றொருவர் அதே ஊரை சேர்ந்த கோபி ஜெகநாதன் (33) என்றும் தெரியவந்தது. இதில், கோபி ஜெகநாதன் காரின் உரிமையாளர் ஆவார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 180 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவின் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். அந்த காரில் பொருத்தப்பட்டிருந்த பதிவு எண் பலகையை தவிர, மேலும் 2 பதிவு எண் பலகைகள் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

கைதான 2 பேரும் சேர்ந்து கஞ்சா கடத்தி விற்பனை செய்வதற்காக ஆந்திராவுக்கு சென்றுள்ளனர். அங்கு கஞ்சா வாங்கிக் கொண்டு வரும் வழியில் போலீசில் சிக்காமல் இருக்கவும், சந்தேகம் வராமல் இருக்கவும் 3 வகையான வாகன பதிவு எண் பலகைகளை வைத்துள்ளனர். அதில் ஒன்று வாகனத்தின் உண்மையான பதிவு எண். மற்ற இரண்டும் வேறு வாகனங் களின் பதிவு எண்கள்.

ஆந்திராவில் இருந்து வரும் போது ஆந்திர போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாகனத்தின் பதிவு எண் பலகையை பொருத்தி உள்ளனர். மேலும் அந்த பதிவு எண்ணுக்கு உரிய வாகன பதிவு புத்தக நகலையும் வைத்துள்ளனர். அதேபோல், தமிழக எல்லைக்குள் வந்ததும், மற்றொரு வாகன பதிவு எண் பலகையை பொருத்தி உள்ளனர். அதற்கான வாகன பதிவு புத்தக நகலையும் வைத்துள்ளனர்.

தேனி மாவட்டத்துக்கு கஞ்சாவை கொண்டு வந்த பின்பு குமணன்தொழு மலைப்பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து, அங்கிருந்து கேரள மாநிலத்துக்கு கடத்தி செல்ல திட்டம் தீட்டி இருந்தனர். ஆனால், வரும் வழியிலேயே போலீசாரிடம் சிக்கி விட்டனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால், மற்ற 2 வாகன பதிவு எண்ணும் எந்த வாகனத்துக்கு உரியது? அவற்றின் உரிமையாளர்கள் யார்? அவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story