ஈரோடு கருங்கல்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை –பணம் திருட்டு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அஜிசுர்ரஹ்மான் (வயது 67). இவருடைய மனைவி குத்துப்தாரா (57). கடந்த மாதம் 27–ந் தேதி அஜிசுர்ரஹ்மான் வீட்டை பூட்டிவிட்டு தனது மனையுடன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை இவரது கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி அஜிசுர்ரஹ்மானுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அனைத்து பொருட்களும் சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த 8 பீரோக்களும் திறந்து கிடந்தன. இதில் ஒரு பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் 6 பவுன் நகையை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர் இதுபற்றி கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைந்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரபீக். தொழில் அதிபர். அதே பகுதியில் உள்ள இவரது அலுவலகத்தின் பூட்டை நேற்று இரவு உடைத்த மர்ம நபர்கள் உள்ளே சென்று அங்கிருந்த பீரோவையும் உடைத்துள்ளனர். ஆனால் பீரோவில் எதுவும் இல்லாததால் திருடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.