பலத்தமழையால் ஆதனூர், மாங்காடு பகுதி வீடுகளில் வெள்ளம் புகுந்தது


பலத்தமழையால் ஆதனூர், மாங்காடு பகுதி வீடுகளில் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 4 Nov 2017 4:00 AM IST (Updated: 4 Nov 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

பலத்தமழையால் ஆதனூர், மாங்காடு பகுதி வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் உள்ள ஏ.வி.எம்.நகர், கோகுல் நகர், டி.டி.சி.நகர், கிருஷ்ணாபுரி, கண்ணதாசன் நகர், லட்சுமிபுரம், உள்பட பல்வேறு பகுதியில் உள்ள தெருக்களில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல்வேறு நகர் பகுதியில் உள்ள சாலைகளிலும் 2 முதல் 3 அடி அளவுக்கு தண்ணீர் ஓடியது.

இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்தனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு முடியாமல் ஒரு தீவில் இருப்பது போல் அந்த பகுதி மக்கள் தவித்தனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:–

ஆதனூர் ஊராட்சியில் உள்ள பல்வேறு நகர்களில் தண்ணீர் சாலைகளில் தேங்கியுள்ளது. மேலும் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. அரசு அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து நேரில் பார்வையிட்டு தண்ணீர் வெளியேறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதே போல ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள செல்வராஜ் நகர், எம்.ஜி.நகர், பிரியா நகர், காமாட்சி நகர், அருள்நகர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள சாலைகளில் மழை வெள்ளம் சுமார் 3 அடிக்கு மேல் செல்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பலர் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி கிடக்கின்றனர்.

கூடுவாஞ்சேரியில் உள்ள மகாலட்சுமிநகர், உதயசூரியன் நகர், ஜெயலட்சுமி நகர், அருள்நகர், அமுதம் காலனி, உள்பட பல்வேறு பகுதியில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த 2015–ம் ஆண்டு இந்த பகுதியில் 5 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் சென்றது. அப்போது அந்த பகுதி மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். இதனால் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக பெருமாட்டுநல்லூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, ஆதனூர், வண்டலூர், மண்ணிவாக்கம், நின்னைக்கரை ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் கொட்டி தீர்த்த கன மழையால் சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சிமன்றம் சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்னரே விஞ்சியம்பாக்கம் ஏரியின் மதகு லேசாக திறந்து விட்டநிலையில் ஏரியின் நீர்மட்டம் குறைந்திருந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் ஏரியின் கொள்ளளவு அதிகமாகி தண்ணீர் தேசிய நெடுஞ்சாலைக்கு வரத்தொடங்கி உள்ளது.

இதனால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மழைநீரில் ஊர்ந்து சென்றன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.கவுஸ்பாஷா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். செங்கல்பட்டு பகுதியில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மேலமையூர், சக்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. சுமார் 100–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் அந்த பகுதி மக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர். தற்போது தெருக்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட செல்வகணபதி நகர் பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அதுமட்டுமின்றி உணவு மற்றும் தண்ணீர் தேவைகளுக்காக இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். தேங்கி உள்ள மழை நீரில் இருந்து பாம்பு, பூரான் உள்ளிட்ட வி‌ஷ பூச்சிகள் வீட்டுக்குள் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

தேங்கி உள்ள மழை நீரில் புழுக்கள் அதிக அளவில் இருப்பதாகவும் அதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story