ஐ.ஏ.எஸ். அதிகாரியை மிரட்டி ரூ.1 கோடி பறித்த தம்பதி கைது


ஐ.ஏ.எஸ். அதிகாரியை மிரட்டி ரூ.1 கோடி பறித்த தம்பதி கைது
x
தினத்தந்தி 3 Nov 2017 10:45 PM GMT (Updated: 3 Nov 2017 8:03 PM GMT)

தானே டோம்பிவிலியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியை மிரட்டி ரூ.1 கோடி பறித்த கணவன்– மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மாநில போக்குவரத்து மேம்பாட்டு கழக துணை தலைவராக பதவி வகித்தவர் ராதேஸ்யாம் மோபல்வர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், நில பேரத்தில் ஈடுபட்டதாக கடந்த ஆகஸ்டு மாதம் சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அவரை பணி இடைநீக்கம் செய்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக, தன்னுடைய விவாகரத்து பிரச்சினை தொடர்பாக தானே டோம்பிவிலியை சேர்ந்த தனியார் துப்பறிவாளர் சதீஷ் என்பவருடன், ராதேஸ்யாம் மோபல்வர் தொடர்பில் இருந்தார். இதனை பயன்படுத்தி, அவரது அந்தரங்க வி‌ஷயங்களை சதீஷ் அறிந்து கொண்டார். மேலும், அவருடன் செல்போனில் மேற்கொண்ட உரையாடலை பதிவு செய்து கொண்டு, ரூ.10 கோடி கேட்டு மிரட்டினார்.

இதைத்தொடர்ந்து, ரூ.7 கோடி தருவதாக ராதேஸ்யாம் மோபல்வர் ஒப்புக்கொண்டார். பின்னர், இதுபற்றி போலீசாருக்கு தெரியப்படுத்தினார். இதன்பேரில், போலீஸ்காரர் ஒருவர் சாதாரண உடையில், டோம்பிவிலியில் உள்ள சதீஷ் வீட்டுக்கு சென்று, அவர் சார்பாக முதற்கட்டமாக ரூ.1 கோடி கொடுத்தார். அதனை சதீசும், அவரது மனைவி ஸ்ரத்தாவும் ஆர்வத்துடன் வாங்கினர்.அப்போது, மறைந்து இருந்து கண்காணித்த போலீசார், கணவன்– மனைவி இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் வீட்டில் இருந்து இரண்டு லேப்டாப், 5 செல்போன்கள், 4 பென்டிரைவ் மற்றும் 15 சி.டி.க்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story