விபத்துகளில் காயம் அடைபவர்களுக்கு உதவ பஸ் நட்பு சேவை திட்டம்


விபத்துகளில் காயம் அடைபவர்களுக்கு உதவ பஸ் நட்பு சேவை திட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2017 3:45 AM IST (Updated: 4 Nov 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

விபத்துகளில் காயமடைபவர்களுக்கு உதவ கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் நட்பு சேவை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை மந்திரி எச்.எம்.ரேவண்ணா தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் சாலை விபத்துகளில் சிக்கி காயம் அடைபவர்களுக்கு விரைந்து சென்று அவசர சிகிச்சை வழங்க பஸ் நட்பு சேவை திட்டத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அந்த திட்ட தொடக்க விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை மந்திரி எச்.எம்.ரேவண்ணா கலந்து கொண்டு அந்த பஸ் நட்பு வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:–

இந்த திட்டத்திற்கு ரூ.3.52 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொலிரோ வாகனத்தில் அவசர சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் இருக்கிறது. விபத்து பற்றி தகவல் கிடைத்தவுடன் அந்த வாகனங்கள் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உதவும். அந்த வாகனத்தில் மருத்துவ ஊழியர்களும் இருப்பார்கள். இவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு லட்சம் கிலோ மீட்டர் பயணத்தில் விபத்து சதவீதம் மிக குறைவாக தான் உள்ளது. இருப்பினும் விபத்துகளையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வாகனங்களை செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஒரு தனியார் நிறுவனம் இணைந்து நிர்வகிக்கும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம்.

தனியார் பஸ்களில் பயணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரத்து செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இவ்வாறு ரேவண்ணா பேசினார்.


Next Story