கோவில்பட்டியில் இளம்பெண் மர்மச்சாவு உதவி கலெக்டர் விசாரணை
கோவில்பட்டியில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா விசாரணை நடத்தி வருகிறார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா விசாரணை நடத்தி வருகிறார்.
லாரி டிரைவரின் மனைவிகோவில்பட்டி நடராஜபுரம் 9–வது தெருவைச் சேர்ந்தவர் ராமராஜன் (வயது 35). லாரி டிரைவர். இவருடைய மனைவி பட்டதுரைச்சி (30). இவர்களுக்கு நிகாஷ் (6) என்ற மகனும், நிதிஷ்கா (4) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் மதியம் பட்டதுரைச்சி தன்னுடைய மகள் நித்திஷ்காவுடன் கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கினார். பின்னர் அவர் கோவில்பட்டி நடராஜபுரம் 7–வது தெரு வழியாக நடந்து சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் பட்டதுரைச்சி பரிதாபமாக உயிரிழந்தார்.
மர்மச்சாவுஉடனே பட்டதுரைச்சியின் கணவர் ராமராஜன் மற்றும் குடும்பத்தினர், இறந்த பட்டதுரைச்சியின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்று, குளிப்பாட்டி இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மர்மமான முறையில் இறந்த பட்டதுரைச்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பட்டதுரைச்சியின் மூக்கில் இருந்து பச்சை நிறத்தில் திரவம் வடிந்ததால், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே பட்டதுரைச்சி விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது அவர் சாப்பிட்ட ஏதேனும் உணவுப்பொருளில் விஷம் இருந்ததா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். திருமணமான 7 ஆண்டுகளில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்ததால், கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.