கூடலூர் பகுதியில் ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
கூடலூர் பகுதியில் ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது. மேலும் 6 வீடுகளை சேதப்படுத்தியது. இதனால் யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வனங்களின் பரப்பளவு குறுகியதாலும், பசுந்தீவனம் தட்டுப்பாடு, மின்வேலிகள் அமைத்தல் என பல்வேறு காரணங்களால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
இந்த நிலையில் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதிக்குள் ஒரு காட்டு யானை நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு புகுந்தது. மேலும் கூடலூர்– சுல்தான்பத்தேரி சாலையை கடந்து உட்பிரையர் தனியார் எஸ்டேட்டுக்குள் அந்த காட்டு யானை சென்றது. இதை கண்ட பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இதனால் தனியார் தேயிலை தோட்ட வனப்பகுதிக்கு காட்டு யானை சென்றது. தொடர்ந்து காட்டு யானை அப்பகுதியில் முகாமிட்டு நிற்பதால் தேவர்சோலை பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் தோட்ட தொழிலாளர்கள அச்சத்துடன் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பந்தலூர் தாலுகா சேரங்கோடு பகுதியில் சுற்றித்திரிந்த மக்னா யானை இடம் பெயர்ந்து தேவர்சோலை ஊருக்குள் வந்துள்ளது. இதனை வனத்துறையினர் முதுமலை வனத்துக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது, என்றனர். இதை தொடர்ந்து மக்னா யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்பாலா அருகே அம்பலக்காடு பகுதியில் 3 காட்டு யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்தது. இதை அறிந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து வனத்துறையினர், யானைகளை விரட்டும் குழுவினர் விரைந்து வந்து நேற்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காலை 9.30 மணி அளவில் வனத்துறையினர் விரட்டியதால் 3 யானைகளும் தனித்தனியாக பிரிந்து சென்றது.
இதில் ஒரு யானை பாரதி நகர், ஈட்டிமூலா வன ஊழியர் குடியிருப்புகள் உள்ள பகுதி வழியாக சாலையில் நடந்து சென்று திருவள்ளூவர் நகருக்குள் புகுந்தது. மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் வீடுகளை காட்டு யானை இடித்து சேதப்படுத்தியது. இதில் பிரதிப், காளிதாஸ், ராமர், தங்கராஜ், ராமசாமி உள்பட 6 பேர் வீடுகள் சேதமடைந்தன.
இந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதி இளைஞர்கள், வனத்துறையினர் இணைந்து காட்டு யானையை விரட்டினர். மற்றொரு யானை ஆனைசெத்தக்கொல்லி வழியாக சென்று மீண்டும் அம்பலக்காடு வனப்பகுதிக்கு வந்தது. இறுதியாக 3 காட்டு யானைகளும் அதே வனப்பகுதிக்கு வந்தது.
இதனிடையே தகவல் அறிந்த ஆர்.டி.ஓ. முருகையன் நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவது குறித்து வனத்துறையினருடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வனப்பகுதிக்கு செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் அடர்ந்த வனத்துக்குள் செல்வதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு உள்ளனர். அந்த காட்டு யானைகள் பொதுமக்கள் குடியிருப்புகளின் அருகே அம்பலக்காட்டில் முகாமிட்டு உள்ளது. இதனால் யானைகள் மீண்டும் ஊருக்குள் வரும் என அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இது குறித்து வனத்துறைக்கு எழுத்து பூர்வமாக மனு அளித்துள்ளோம். ஆனால் வன ஊழியர்கள் வந்து யானைகளை சிறிது நேரம் விரட்டி விட்டு இரவில் தானாக சென்று விடும் என கூறி அங்கிருந்து சென்று விடுகின்றனர்.
யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி இருந்தால் மீண்டும் அவை ஊருக்குள் வந்து வீடுகளை சேதப்படுத்தி இருக்காது. தொடர்ந்து காட்டு யானைகள் இந்த பகுதியில் முகாமிட்டு உள்ளதால் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். எனவே முதுமலை வளர்ப்பு யானைகளை (கும்கி) கொண்டு வந்து விரட்டினால் மட்டுமே காட்டு யானைகள் இங்கிருந்து செல்லும். இல்லை என்றால் தொடர்ந்து இப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.