மாமியாரை கழுத்தை நெரித்து மருமகள் கொல்ல முயன்ற வழக்கு: தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது
மாமியாரை கழுத்தை நெரித்து மருமகள் கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மூணாறு,
மூணாறை அடுத்துள்ள மாங்குளம் விரிவுபாறை பகுதியை சேர்ந்தவர் பிஜூ. இவருடைய மனைவி மினி (வயது 34). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். சம்பவத்தன்று கள்ளக்காதலனுடன், மினி செல்போனில் பேசி கொண்டிருந்தார்.
இதை மினியின் மாமியார் அச்சம்மா (70) பார்த்துள்ளார். பின்னர் தன் மகனை ஏமாற்றி விட்டு வேறு ஒருவனிடம் பேசுகிறாயா? என்று கேட்டுள்ளார். கள்ளக்காதல் ரகசியம் வெளியே தெரிந்ததால் ஆத்திரம் அடைந்த மினி, மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்த போது மாமியார் மயங்கி விழுந்துவிட்டதாக கணவருக்கு மினி தகவல் கொடுத்துள்ளார். பின்னர் ஆலுவா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அச்சம்மா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில், அச்சம்மாவின் கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகித்தனர். தொடர்ந்து தேவிகுளம் போலீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது மினியின் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்ததில் கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் கேபிள் வயரால் மாமியாரை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து மினியின் கள்ளக்காதலன் குறித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவருடைய பெயர் பிஜூ ஜோசப் (45) என்பதும், அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தேவிகுளம் பஸ் நிறுத்தம் பகுதியில் அவர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் பிஜூ ஜோசப்பை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அப்போது போலீசாரிடம் அவர் திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:–
எனக்கும், மினிக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே பழக்கம் இருந்து வந்தது. நான் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி சென்று மினியுடன் தனிமையில் இருந்து வந்தேன். இதனை ஒருமுறை அச்சம்மா பார்த்துவிட்டு அவரை கண்டித்துள்ளார். இதையடுத்து அவரை கொலை செய்ய மினி திட்டமிட்டார். அதற்கு நானும் உதவுவதாக தெரிவித்தேன்.
அதன்படி சம்பவத்தன்று அவருடைய வீட்டுக்கு சென்ற போது அச்சம்மா இல்லை. மினி மட்டும் இருந்தார். சிறிது நேரத்தில் அச்சம்மா வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த நான், கேபிள் வயரால் அவருடைய கழுத்தை நெரித்தேன். இதில் அவர் மயக்க நிலைக்கு சென்றார். நான் அவர் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து சென்றுவிட்டேன்.
மினியும் மாமியார் மயக்கமடைந்ததாக கணவருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போலீசார் அவரை கண்டுபிடித்ததும் என்னை காப்பாற்றுவதற்காக, மாமியாரை நான் தான் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றேன் என போலீசில் மினி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.