தர்மபுரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 1,112 பேருக்கு பணிநியமன ஆணை


தர்மபுரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 1,112 பேருக்கு பணிநியமன ஆணை
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1,112 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமை கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் சென்னை,சேலம், ஈரோடு, கோவை, நாமக்கல், ஓசூர்,தர்மபுரி மற்றும் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்தனர்.

வேலைவாய்ப்பு முகாமில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிப்புகளை முடித்த இளைஞர்கள், இளம்பெண்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், தையல்பயிற்சி முடித்தவர்கள் பல்வேறு வகையான தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள் என5,365 பேர் பங்கேற்றனர். இந்த முகாமில் பங்கேற்ற இளைஞர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதேபோல் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக இந்த முகாமில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த முகாமின் முடிவில் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 1,112 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் காளிதாசன், உதவி கலெக்டர் ராமமூர்த்தி, வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் மகேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, பழனிசாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story