ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்ட பீளமேடு ரெயில்வே மேம்பாலத்தை அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு


ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்ட பீளமேடு ரெயில்வே மேம்பாலத்தை அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 6 Nov 2017 4:15 AM IST (Updated: 6 Nov 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

கோவை பீளமேட்டில் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கோவை,

கோவையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வெள்ளலூர், நஞ்சுண்டாபுரம், பீளமேடு, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, ஆவாரம்பாளையம், ரத்தினபுரி ஆகிய பகுதிகளில் ரெயில்வே மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இதில் வெள்ளலூர், நஞ்சுண்டாபுரம், ரத்தினபுரி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பால பணிகள் முடிவடைந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டன.

ஆனால் ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அங்கு பாலம் கட்டுவது தாமதமாகி வருகிறது. எஸ்.ஐ.எச்.எஸ். காலனி நீலிகோணாம்பாளையம் சாலையில் அமைந்து உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் 2 பக்கமும் சேவை சாலைகள் அமைப்பதற்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதில் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இதனால் மேம்பாலம் கட்டுமான பணிகளில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி 39–வது வார்டு பீளமேடு ரெயில் நிலையம் அருகே ரூ.30 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2010–ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்வதில் இழுபறி ஏற்பட்டதால் பாலம் கட்டும் பணியில் தேக்கம் ஏற்பட்டது.

ரெயில்வே துறை சார்பில் தண்டவாளத்துக்கு மேல் உள்ள பகுதி மட்டும் பாலம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அதன் 2 பக்கமும் அமைக்கப்பட வேண்டிய பாலம் அமைப்பதில் தொய்வு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பாலம் அமைப்பதற்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப் பட்டு அதன் பின்னர் பணிகள் நடைபெற்றன. இருந்த போதிலும் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து கோவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கோவை பீளமேடு ரெயில் நிலையம் அருகில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் 7½ மீட்டர் அகலத் தில் இந்த ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் 2 பக்கமும் சேவை சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேம்பாலத்துடன் சாலையை இணைக்கும் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இது தவிர மேம்பாலத்தின் மேற்பகுதியில் விளக்குகள் அமைப்பதற்காக மின்கம்பங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இந்த பாலம் அமைக்கப்பட்டு உள்ளதால் பாலத்தின் 2 பக்கமும் கைப்பிடி சுவர்கள் உயரமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து அடுத்த மாதம் (டிசம்பர்) திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story