சென்னை தொழில் அதிபரிடம் நகை திருட்டு கார் டிரைவர் கைது
உறவினர் திருமணத்துக்காக கோவை சென்ற தொழில் அதிபரிடம் தங்க நகையை திருடிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 65). தொழில் அதிபர். இவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி ஹேமலதாவுடன் கடந்த 1–ந் தேதி கோவை சென்றார். பின்னர் ராம்நகரில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் ஒரு காரை வாடகைக்கு எடுத்தார்.
அவர்கள், அந்த காரில் கோவையின் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு, திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அதே காரில் 2–ந் தேதி சென்னை செல்வதற்காக கோவை ரெயில் நிலையம் சென்றனர். அப்போது ஹேமலதா அணிந்திருந்த 16 பவுன் தங்க நகைகளை ஒரு பையில் வைத்திருந்தார். காரை விட்டு இறங்கும் போது அந்த பையை எடுக்க மறந்து, ரெயிலில் ஏறி சென்னை வந்து விட்டனர்.
அங்கு வீட்டுக்கு சென்றதும் நகை உள்ள பையை தேடிய போது அதை காணவில்லை. அப்போது வாடகை காரில் நகை பையை வைத்தது நினைவுக்கு வந்தது. உடனே அவர்கள், கார் டிரைவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது செல்போன் எண் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து பிரபாகரன் கோவை வந்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக பிரபாகரன் வாடகைக்கு கார் எடுத்த தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் விசாரித்த போது கார் டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 23) என்பதும், அவர் 2 நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு சென்றதும் தெரியவந்தது.
எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ஒட்டன்சத்திரம் சென்று ரஞ்சித்தை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் 16 பவுன் நகையை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அந்த நகையை விற்று சொந்த கார் வாங்கும் ஆசையில் நகைகளை திருடியதாக அவர் கூறினார். இதையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். திருட்டுப் போன ரூ.5 லட்சம் மதிப்புள்ள 16 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.