வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நண்பர் கைது
பெங்களூருவில் வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர். வருங்கால மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கூறியதால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு சுங்கதகட்டேயில் உள்ள ஹெக்கனஹள்ளி கிராசில் வாலிபர் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் (அக்டோபர்) 12–ந் தேதி பிணமாக கிடந்தார்.விசாரணையில், அவர் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த பசவலிங்கய்யா (வயது 26) என்பதும், அவர் சிக்பேட்டையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் பசவலிங்கய்யா கொலை செய்யப்பட்ட தினத்தில் அவரும், அவருடைய நண்பரும் அந்த பகுதியில் உள்ள மதுபான விடுதியில் மதுபானம் குடித்ததும் தெரியவந்தது. இதனால், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பசவலிங்கய்யாவை அவருடைய நண்பர் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இதையடுத்து, பசவலிங்கய்யாவுடன் சேர்ந்து மதுபானம் குடித்து அவரை கொன்ற நண்பர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், நண்பர் பெயர் மஞ்சுநாத் (28) என்பதும், ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகாவை சேர்ந்த அவரும் பெங்களூருவில் தங்கி கூலி தொழிலாளியாக வேலை செய்து வருவதும், அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மஞ்சுநாத்தை நேற்று முன்தினம் காமாட்சிபாளையா போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பசவலிங்கய்யாவை அவர் கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட பசவலிங்கய்யாவும், கைதான மஞ்சுநாத்தும் நண்பர்கள் ஆவார்கள். 2 பேரும் பெங்களூருவில் வேலை செய்வதால் அடிக்கடி சந்தித்துள்ளனர். இந்த நிலையில், பசவலிங்கய்யாவிடம், மஞ்சுநாத் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்கிடையே, மஞ்சுநாத்துக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. சம்பவத்தன்று நள்ளிரவில் அவர்கள் 2 பேரும் மதுபான விடுதிக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளனர்.குடிபோதையில் இருந்த பசவலிங்கய்யா, தான் கொடுத்த ரூ.20 ஆயிரத்தை மஞ்சுநாத்திடம் திரும்ப கேட்டுள்ளார். அப்போது, அவர் திருமணம் முடிந்தவுடன் பணத்தை திரும்ப கொடுப்பதாக கூறியுள்ளார். இந்த வேளையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட அவருடைய வருங்கால மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி மஞ்சுநாத்திடம், பசவலிங்கய்யா கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மஞ்சுநாத், பசவலிங்கய்யாவை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.