மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரும்படி பெண்கள் மனு
நிதிநிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரும்படி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள், தங்களுடைய கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் அருகேயுள்ள கொட்டப்பட்டியை சேர்ந்த ஏராளமான பெண்கள், நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தரும்படி மனு கொடுத்தனர். இது குறித்து பெண்கள் கூறுகையில், தனியார் நிதிநிறுவனத்தில் அதிக வட்டி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் பணத்தை முதலீடு செய்தோம். கொட்டப்பட்டியில் இருந்து 100–க்கும் மேற்பட்டோர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி இருக்கிறோம்.
எங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே முதிர்வு தொகை தர வேண்டும். ஆனால், அந்த நிதிநிறுவனம் திடீரென மூடப்பட்டதால், எங்களுக்கு முதிர்வு தொகை கிடைக்கவில்லை. இதனால் திருமணம் போன்ற குடும்ப விழாக்களை நடத்த முடியாமல் தவிக்கிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முதிர்வு தொகையை திரும்ப பெற்றுத்தர வேண்டும், என்றனர்.
வேடசந்தூர் தாலுகா கோட்டாநத்தம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் இலவச வீட்டுமனை கேட்டு மனு கொடுத்தனர். அதுபற்றி பெண்கள் கூறுகையில், நாங்கள் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். மேலும் வாடகை வீட்டில் வசிப்பதால் மிகவும் சிரமப்படுகிறோம். எங்களுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும், என்றனர்.
மேலும் பஜ்ரங்தள் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி கொடுத்த மனுவில், ஆத்தூர் தாலுகா சத்திரப்பட்டி டி.கோம்பையில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வனவிலங்குகள் காடுகளை விட்டு, விவசாய நிலத்துக்குள் புகுந்து விடும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை உடனடியாக தடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் வடமதுரை அருகேயுள்ள பிலாத்துவை அடுத்த வாலிசெட்டிபட்டியை சேர்ந்த பெரியக்காள் (வயது 68) கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், நான் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கினேன். அப்போது மில்லில் வேலை செய்தேன். அதன்பின்னர் கூலி வேலை செய்தேன்.
அதன் மூலம் கிடைத்த பணத்தை அந்த வங்கி கணக்கில் செலுத்தி வந்தேன். அந்த வங்கி கணக்கில் ரூ.2½ லட்சம் வரை சேமித்து வைத்து இருந்தேன். இந்த நிலையில் தற்போது வங்கி கணக்கில் ரூ.500 மட்டுமே இருப்பதாக கூறுகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.