லாஸ்பேட்டை பேக்கரியில் திடீர் தீ விபத்து ரூ.5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்


லாஸ்பேட்டை பேக்கரியில் திடீர் தீ விபத்து ரூ.5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:15 AM IST (Updated: 7 Nov 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

புதுவை லாஸ்பேட்டையில் பேக்கரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. ரூ.5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் லாஸ்பேட்டை அவ்வை நகர் ஏர்போர்ட் சாலையில் பேக்கரி வைத்துள்ளார். இவரது பேக்கரிக்கு அருகில் மருந்துக்கடையும், ஏ.டி.எம். மையமும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏழுமலை வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை மூடிச் சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் திடீரென அவரது பேக்கரியில் இருந்து புகை மூட்டம் வந்தது. அப்போது அந்த பகுதியாக சென்றவர்கள் இதனை பார்த்து விட்டு பேக்கரியின் உரிமையாளர் ஏழுமலைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு விரைந்து சென்று பேக்கரியின் கதவை திறந்து பார்த்தார். அப்போது பேக்கரி முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து கோரிமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி மனோகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் பேக்கரியில் இருந்து பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story