விளாத்திகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விளாத்திகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:15 AM IST (Updated: 7 Nov 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி வைப்பாற்று படுகையில் தனியாருக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் நிலத்தில் மீன்களை வளர்ப்பதற்காக, 3 இடங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் இருந்து 110 யூனிட் ஆற்று மணல் எடுக்கப்பட்டது. இந்த ஆற்று மணலை வாகனங்களின் மூலம் வெளியில் எடுத்து செல்வதற்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, வைப்பாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஒரு மாதத்துக்கு அனுமதி வழங்கி உள்ளார்.

இதற்காக வைப்பாற்றில் நீர்வழித்தடத்தை மறித்து, வாகனங்கள் செல்லும் வகையில், சரள் கற்களால் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வைப்பாற்றில் முறைகேடாக இரவும் பகலும் மணல் கொள்ளை நடைபெறும் அபாயம் உள்ளது.

ஆர்ப்பாட்டம்

மேலும் சித்தவநாயக்கன்பட்டி வைப்பாற்று படுகையில் உறைகிணறு அமைத்து, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 20-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே உறைகிணறு அருகில் ஆற்றுமணலை அள்ளினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே சித்தவநாயக்கன்பட்டி வைப்பாற்று படுகையில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்தும், இதற்காக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீர்வழித்தடத்தின் குறுக்கே அமைக்கப்பட்ட பாதையை அகற்ற வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மல்லிகா, தாலுகா செயலாளர் புவிராஜ், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஜோதி, ராமலிங்கம் உள்பட ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். 

Next Story