திருப்பனந்தாள் பகுதியில் பலத்த மழை வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி


திருப்பனந்தாள் பகுதியில் பலத்த மழை வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி
x
தினத்தந்தி 7 Nov 2017 4:15 AM IST (Updated: 7 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

திருப்பனந்தாள் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.

திருப்பனந்தாள்,

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள், கட்டாநகர், ஆதிதிராவிடர் தெரு ஆகிய பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில் பல்வேறு வீடுகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இந்த தொகுப்பு வீட்டில் திருப்பனந்தாள் அருகே உள்ள ஆதிதிராவிடர் கீழ தெருவை சேர்ந்த ஜெகதம்(வயது65), அவரது மகன் அருமைதுரை, அவரது மனைவி ஜீவா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் திருப்பனந்தாள் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று காலை ஜெகதம் வசித்த தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஜெகதம் பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் வெளியே சென்றதால் உயிர் தப்பினர்.

சீரமைக்க கோரிக்கை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவிடைமருதூர் தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பலியான ஜெகதம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் திருப்பனந்தாள் போலீசார், ஜெகதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் 10 தொகுப்பு வீடுகள் பழுதடைந்து உள்ளதால் அதனை உடனே சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Next Story