தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் கலெக்டர் தகவல்


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Nov 2017 3:30 AM IST (Updated: 8 Nov 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருவதாக, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருவதாக, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

தடுப்பு நடவடிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி 5–வது வார்டுக்கு உட்பட்ட முத்தம்மாள் காலனியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் உடன் இருந்தார்.

ஆய்விற்கு பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது;–

கொசு ஒழிப்பு பணி தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில், சுகாதாரத்துறை, மாநகராட்சி, நகரசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதோடு, கொசு ஒழிப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் தங்களது பகுதிகளில் தீவிர கள ஆய்வு மற்றும் தொடர் தணிக்கை செய்து, தங்கள் பகுதிகளில் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க துரிதமாக செயல்பட வேண்டும்.

மருத்துவ வசதிகள் தயார்

பொது மக்கள் வெளியூர் செல்லும் போது தங்கள் வீடுகளில் நல்ல தண்ணீரை சேமித்து வைக்க வேண்டாம். வீடுகளின் சுற்றுப்புறத்திலும் நல்ல நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்வதோடு, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக சுய வைத்தியம் செய்யாமல், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.

அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளது. எனவே, பொது மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story