எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை


எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2017 4:00 AM IST (Updated: 8 Nov 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 195 விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் நேற்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் வேகமாக வந்தது. அதில் வந்த இலங்கை கடற்படையினர் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஒரு விசைப்படகை சுற்றி வளைத்தனர்.

அந்த விசைப்படகில் இருந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 28), ஜகுபர் (40), கஜேந்திரன் (32), கருப்பையா (35) ஆகிய 4 மீனவர்களையும் எல்லை தாண்டி அத்துமீறி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்தனர். மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அபகரித்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து 4 மீனவர்களையும், அவர்களின் விசைபடகுடன் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகம் அலுவலகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். பின்னர் மீனவர்கள் 4 பேரையும் அங்குள்ள ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து கோட்டைப்பட்டினத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அறிந்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் இச்சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புதுக்கோட்டை மீனவர்கள் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 2 வாரங்களில் 3-வது முறையாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும், உடனடியாக விடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story