குள்ளஞ்சாவடி அருகே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


குள்ளஞ்சாவடி அருகே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Nov 2017 4:00 AM IST (Updated: 8 Nov 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

குள்ளஞ்சாவடி அருகே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ளது வழுதலம்பட்டு கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதையை வழுதலம்பட்டு, சின்னதானங்குப்பம், சமட்டிக்குப்பம் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிகளவு கிராம மக்கள் பயன்படுத்தும் இந்த சுரங்கப்பாதையில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைபெய்யும் போது சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கும். பல நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரால் கிராம மக்களின் போக்குவரத்து தடைப்படும்.

வழுதலம்பட்டில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதைக்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக வழுதலம்பட்டு சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த பாதையை அப்பகுதியை சேர்ந்த 10–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கிராம மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி கடலூர், சிதம்பரம், வடலூர் பகுதிக்கு தினமும் சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ–மாணவிகள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று காலை 10 மணிக்கு வழுதலம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே கிராம மக்கள் ஒன்று திரண்டு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் சுரங்கப்பாதைக்கு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ஹேமமாலினி, குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story