கர்நாடகத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் ‘விகா‌ஷ வாகினி யாத்திரை’ என்ற பெயரில் குமாரசாமி பிரசார பயணம்


கர்நாடகத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் ‘விகா‌ஷ வாகினி யாத்திரை’ என்ற பெயரில் குமாரசாமி பிரசார பயணம்
x
தினத்தந்தி 8 Nov 2017 3:00 AM IST (Updated: 8 Nov 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

‘விகா‌ஷ வாகினி யாத்திரை’ என்ற பெயரில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பிரசார பயணத்தை மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து நேற்று தொடங்கினார்.

மைசூரு,

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு ‘விகா‌ஷ வாகினி யாத்திரை’ என்ற பெயரில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பிரசார பயணத்தை மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து நேற்று தொடங்கினார்.

குமாரசாமி பிரசார பயணம்

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள காங்கிரசும், பா.ஜனதாவும் பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. ‘மனே மனேகே காங்கிரஸ்’ என்ற பெயரில் காங்கிரசாரும், ‘மாற்றத்திற்கான பயணம்’ என்ற பெயரில் பா.ஜனதாவினரும் இப்போதே தங்களது பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் மாநிலம் முழுவதும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தேசிய கட்சிகளுடன் மல்லுக்கட்டும் வகையில், மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியும் தற்போது தேர்தலை முன்னிட்டு தனது பிரசார பயணத்தை தொடங்கி உள்ளது. ‘விகா‌ஷ வாகினி யாத்திரை’ என்ற பெயரில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நேற்று தனது பிரசார பயணத்தை மைசூருவில் சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து தொடங்கினார்.

சிறப்பு பூஜைகள்

முன்னதாக இந்த பிரசார பயணம் வெற்றியடைய வேண்டி மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவேகவுடா, அவருடைய மனைவி சென்னம்மா, மகனும், கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான குமாரசாமி, மருமகள் அனிதா உள்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

பூஜைகளை முடித்துக்கொண்டு கோவிலில் இருந்து வெளியே வந்த குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

113 இடங்களே போதும்

அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று பா.ஜனதாவினரும், 120 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று காங்கிரசாரும் கூறி வருகிறார்கள். ஆனால் அவர்களின் கணக்கு பலிக்காது. ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எந்தவொரு இலக்கும் கிடையாது. மக்களின் ஆதரவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி இம்முறை மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

ஆட்சியை பிடிக்க 113 இடங்களே போதுமானது. கர்நாடகத்தில் மீண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் விவசாயக்கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்படும். கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கவே இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளோம்.

கவலை அடைய தேவையில்லை

ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர முடிவு செய்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் குறித்து கவலை அடைய தேவையில்லை. காங்கிரசும், பா.ஜனதாவும்தான் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு சவால் விடும் வகையில் உள்ளது. வேறு யாரும் இல்லை. பிற கட்சியில் இருந்தும், புதிதாகவும் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர விரும்புபவர்கள் இப்போது கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். கடைசி நேரத்தில் வந்தால் நாங்கள் யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story