பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து நெல்லையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து நெல்லையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:30 AM IST (Updated: 9 Nov 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து நெல்லையில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியினர் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது. இந்த பண மதிப்பு நீக்க தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்பதாக கூறி தி.மு.க. சார்பில் நவம்பர் 8-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நெல்லை கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் ஆகியோர் தலைமை தாங்கினர்.

எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், பூங்கோதை, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். சிலர் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

ஆர்ப்பாட்டம் நடந்த போது, லேசான மழை பெய்தது. மழையிலும் தி.மு.க.வினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோதர்மைதீன், அப்பாவு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் மீரான் மைதீன், செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி, மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் உஸ்மான்கான், துணை செயலாளர் ஜப்பார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், தி.மு.க. மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் பெருமாள், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், அவைத்தலைவர் சுப.சீதாராமன், விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், ராதாபுரம் யூனியன் முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ஆதித்தமிழர் பேரவையின் நெல்லை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி.ராமசுப்பு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் 11 பேர் மொட்டை அடித்தனர்.

இந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வானமாமலை, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் காமராஜ், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுந்தரராஜ பெருமாள், உமாபதி சிவன், சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் அப்துல்காதர், சிறுபான்மை பிரிவு நெல்லை மாவட்ட தலைவர் அந்தோணி செல்வராஜ், மாவட்ட துணை தலைவி தமிழ்செல்வி, மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்து தேசிய கட்சியின் மாநில தலைவர் மணி தலைமையில் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வாழை இலையில் எள்ளு, பழைய ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டு தர்ப்பணம் செய்யப்பட்டன. இதில் இந்து தேசிய கட்சியின் மாநில பொது செயலாளர் இசக்கி அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story