ஸ்ரீரங்கத்தில் விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது


ஸ்ரீரங்கத்தில் விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2017 4:45 AM IST (Updated: 9 Nov 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கத்தில் விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீரங்கம்,

திருச்சி சோமரசம்பேட்டை பொன்நகரை சேர்ந்தவர் அருளானந்தராஜ்(வயது40). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் புங்கனூரில் உள்ளது. இதை 8 பிரிவுகளாக பிரிப்பதற்காக ஆன் லைன் மூலம் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார். பதிவு செய்து 9 மாதங்கள் ஆகியும் நிலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரித்து கொடுக்க வில்லை.

இந்த நிலையில் தனது நிலத்தை பிரித்து கொடுக்கும்படி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையர் கணேசனை அணுகி உள்ளார். அதற்கு அவர் ஒரு பிரிவுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 8 பிரிவுகளாக பிரித்து கொடுக்க ரூ.80 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் இவ்வளவு பணம் கொடுக்க முடியாது, ரூ.50 ஆயிரம் தருகிறேன் என்று கூறி உள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அருளானந்தராஜ் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கணேசனை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்த போலீசார், ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை அருளானந்தராஜிடம் கொடுத்து அனுப்பினர். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், நவநீதகிருஷ்ணன், தேவிராணி ஆகியோர் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று மறைந்து இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ரூ.50 ஆயிரத்தை அலுவலகத்தில் இருந்த நில அளவையர் கணேசனிடம், அருளானந்தராஜ் கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த போலீசார் விரைந்து வந்து கணேசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அலுவலகத்தில் சோதனை செய்த போது அதில் கணக்கில் வராத மேலும் ரூ.63 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மணப்பாறையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். இதையடுத்து கணேசனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 

Related Tags :
Next Story