பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி


பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2017 4:47 AM IST (Updated: 9 Nov 2017 11:06 AM IST)
t-max-icont-min-icon

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

மும்பை,

நாட்டில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதனை கருப்பு தினமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடைப்பிடித்தனர். இந்த நிலையில், மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், டிஜிட்டல் பரிவர்த்தனை 58 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அன்றாட வாழ்வில், ரொக்க பயன்பாட்டை இந்த யோசனை குறைத்தது. கடந்த ஆண்டில், நாட்டில் வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை 26 லட்சமாக இருந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர், வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை 56 லட்சமாக அதிகரித்துள்ளது.

நடவடிக்கை தொடரும்

பணமதிப்பு நீக்க நடவடிக்கை சிலரை பாதித்து இருக்கும். அவர்கள் ஏன் காயப்பட்டார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களிடம் கருப்பு பணம் இருந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், இந்த பணம் பயனற்றதாகி விட்டது.

நாட்டில், ஏராளமான நிறுவனங்கள் பல்வேறு வங்கிகளில் 100-க்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பதை கண்டறிந்தோம். இதனை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை தொடரும்.

இவ்வாறு நிதின் கட்காரி தெரிவித்தார். 

Next Story