தஞ்சையில் சசிகலா கணவர் நடராஜன் வீடு உள்பட 7 இடங்களில் வருமானவரிசோதனை


தஞ்சையில் சசிகலா கணவர் நடராஜன் வீடு உள்பட 7 இடங்களில் வருமானவரிசோதனை
x
தினத்தந்தி 10 Nov 2017 4:45 AM IST (Updated: 9 Nov 2017 11:07 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் சசிகலா கணவர் நடராஜன் வீடு உள்பட 7 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர்கள், டி.டி.வி. தினகரன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி தஞ்சையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் சசிகலாவின் உறவினர் வீடுகள் என 7 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

தஞ்சை அருளானந்தநகரில் உள்ள 3–வது தெருவில் உள்ள சசிகலாவின் கணவர் ம.நடராஜன் வீட்டில் நேற்று காலை 6.30 மணி முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதே போல் அருளானந்த நகர் பரிசுத்தம் நகரில் உள்ள சசிகலாவின் சகோதரர் வினோதகனின் மகனும், முன்னாள் ஜெயலலிதா பேரவை செயலாளருமான மறைந்த டி.வி.மகாதேவன் வீடு, அவருடைய சகோதரர் தங்கமணி ஆகியோர் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகனும், டி.டி.வி. தினகரனின் மைத்துனருமான டாக்டர் வெங்கடேஷ் வீடு தஞ்சை– புதுக்கோட்டை சாலையில் உள்ளது. இந்த வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்திய அதிகாரிகள் வீட்டின் பின்புறமும் சென்று பார்த்தனர்.

இதே போல அருளானந்தநகரில் உள்ள நடராஜனின் சகோதரி மகன் சின்னையா என்ற வெங்கடேசன் வீட்டிலும், தஞ்சை பிலோமினா நகரில் உள்ள அ.தி.மு.க. அம்மா அணி ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ராஜேஸ்வரன் வீட்டிலும், தஞ்சை மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனியில் உள்ள தஞ்சை வடக்கு மாவட்ட அ.திமு.க. அம்மா அணி வக்கீல் பிரிவு செயலாளர் வேலுகார்த்திகேயன் ஆகியோர் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து 3 கார்களில் வந்த 15–க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 6.30 மணி முதல் இந்த சோதனையை நடத்தினர். இந்த சோதனை நடந்த வீடுகளின் முன்பு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும் அந்தந்த வீடுகள் முன்பு திரண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்து சென்றனர்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து தற்போது சென்னையில் உள்ளார். இந்த நிலையில் தஞ்சையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.


Next Story