பக்கத்து வீட்டு நாயை துப்பாக்கியால் சுட்ட பொக்லைன் எந்திர ஆபரேட்டர் போலீசார் விசாரணை


பக்கத்து வீட்டு நாயை துப்பாக்கியால் சுட்ட பொக்லைன் எந்திர ஆபரேட்டர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Nov 2017 4:45 AM IST (Updated: 10 Nov 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே பக்கத்து வீட்டு நாயை துப்பாக்கியால் சுட்ட பொக்லைன் எந்திர ஆபரேட்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேச்சேரி,

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மல்லிகுந்தம் ஊராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35), விசைத்தறி உரிமையாளர். இவர் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். கடந்த 7-ந் தேதி மாலையில், துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டு செந்தில்குமார் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர்.

அப்போது அங்கிருந்த நாய் குண்டடிப்பட்டு குடல் சரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக நாமக்கல்லில் உள்ள கால்நடை அரசு மருத்துவமனைக்கு செந்தில்குமார் தனது வளர்ப்பு நாயை கொண்டு சென்றார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் சரிந்த குடலை நாயின் வயிற்றுப்பகுதியில் வைத்து தைக்கப்பட்டது.

பின்னர் அந்த நாயை ஸ்கேன் செய்து பார்த்த போது, அதன் உடம்பில் 36 சிறிய பால்ரஸ் குண்டுகள் பாய்ந்திருந்தது தெரியவந்தது. இதில் சில குண்டுகளை மட்டுமே கால்நடை மருத்துவமனை டாக்டரால் எடுக்க முடிந்தது. மீதமுள்ள குண்டுகள் நாயின் உடம்பிலேயே உள்ளதால் ஆபத்தான நிலையில் அந்த நாய் செந்தில்குமாரின் வீட்டில் தற்போது உள்ளது.

இதுகுறித்து செந்தில்குமார் மேச்சேரி போலீசில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், அதே பகுதியில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சித்தநாதன் என்பவரின் வீட்டு அருகே இருந்து தான் எனது நாய் ரத்தம் வடிந்த நிலையில் எங்கள் வீட்டுக்கு ஓடிவந்துள்ளது. எனவே அவர் தான் துப்பாக்கியால் நாயை சுட்டு இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் சித்தநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சித்தநாதன் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். அவர் எந்த வகை துப்பாக்கியை பயன்படுத்தி நாயை சுட்டார், அந்த துப்பாக்கிக்கு அனுமதி உள்ளதா? எதற்காக நாயை சுட்டார் என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story