கலபுரகி அருகே பரபரப்பு டிரைவர் இல்லாமல் 13 கிலோ மீட்டர் தூரம் ஓடிய ரெயில் என்ஜின்
கலபுரகி அருகே டிரைவர் இல்லாமல் 13 கிலோ மீட்டர் தூரம் ரெயில் என்ஜின் மட்டும் தனியாக ஓடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு,
கலபுரகி அருகே டிரைவர் இல்லாமல் 13 கிலோ மீட்டர் தூரம் ரெயில் என்ஜின் மட்டும் தனியாக ஓடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர் ஆகிய 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் என்ஜினை பின்தொடர்ந்து சென்று சாமர்த்தியமாக நிறுத்தினர்.
எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும்...சென்னை–மும்பை இடையே மும்பை மெயில் என்ற ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயிலில் எலெக்ட்ரிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அருகே வாடி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. வாடி ரெயில் நிலையத்தில் வைத்து எலெக்ட்ரிக் என்ஜினை மாற்றிவிட்டு டீசல் என்ஜினை ரெயிலில் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதனால் எலெக்ட்ரிக் என்ஜினின் டிரைவர் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், ரெயிலில் இருந்து கழற்றப்பட்ட எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும் திடீரென்று தண்டவாளத்தில் தானாக ஓடத் தொடங்கியது. இதைப்பார்த்து அங்கிருந்த டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுபற்றி அருகில் உள்ள ரெயில் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும் தனியாக வருவதாகவும், அதனால் அந்த தண்டவாளத்தில் எதிர் திசையில் மற்ற ரெயில்கள் வர அனுமதிக்க வேண்டாம் என்று கூறினார்கள்.
13 கிலோ மீட்டர் தூரம் ஓடியதுஅதே நேரத்தில் தனியாக ஓடிய என்ஜினை நிறுத்த டிரைவர், வாடி ரெயில் நிலைய ஊழியர் ஒருவர் ஆகிய 2 பேரும் அங்கிருந்த மோட்டார் சைக்கிளில் எலெக்ட்ரிக் என்ஜினை பின்தொடர்ந்து சென்றனர். ஆனாலும் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும் டிரைவர் இல்லாமல் தனியாக ஓடியது. பின்னர் கலபுரகி அருகே நால்வார் ரெயில் நிலையத்தின் முன்பாக வைத்து, மெதுவாக எலெக்ட்ரிக் என்ஜின் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே ஊழியர் லாவகமாக டிரைவரை என்ஜினில் ஏற்றிவிட்டார். அதன்பிறகு டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு என்ஜினை நிறுத்தினார்.
இந்த சம்பவத்தினால் வாடி மற்றும் நால்வார் ரெயில் நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் வாடி ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை மெயில் ரெயில் புறப்பட்டு செல்ல காலதாமதம் ஆனதுடன், பயணிகளும் பீதி அடைந்தார்கள். அதிர்ஷ்டவசமாக எலெக்ட்ரிக் என்ஜின் சென்ற தண்டவாளத்தில் மற்ற ரெயில்கள் அனுமதிக்கப்படாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.