புதுவை, சிதம்பரத்தில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை


புதுவை, சிதம்பரத்தில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 10 Nov 2017 4:30 AM IST (Updated: 10 Nov 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

புதுவை, சிதம்பரத்தில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

சிதம்பரம்,

புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள ஒரே நிறுவனத்தை சேர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி நகை கடைகள் ஸ்ரீ லட்சுமி ஜூவல்லரி என்ற பெயரில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் நேற்று காலை வந்தனர். அப்போது கடைகள் திறக்கப்படவில்லை.இதனால் கடை உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு கடைக்கு வரும்படி அழைத்தனர். அவர் வந்ததும் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைக் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது கடைகளின் கதவு இழுத்து மூடப்பட்டது. வருமான வரி சோதனை நடப்பது தெரியாமல் வழக்கம்போல் கடைக்கு வேலைக்கு வந்த ஊழியர்களுக்கு கடைக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 2 கடைகளிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை மாலை 6 மணிக்கு மேலாகவும் நீடித்தது.

இந்த கடையின் ஒரு கிளை கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேணுகோபால்பிள்ளை தெருவில் இயங்கி வருகிறது. இந்த நகைக்கடை முன்பு நேற்று மாலை 3.30 மணிக்கு புதுச்சேரி பதிவெண் கொண்ட ஒரு வாகனம் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக அந்த கடைக்குள் நுழைந்து, வருமான வரித்துறையினர் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு கடையின் கதவை உள்பக்கமாக பூட்டினர். பின்னர், கடையில் உள்ள ஆவணங்கள், இருப்பு நகைகள் உள்ளிட்டவைகளை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 9.10 மணி வரை நடந்தது. சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இதேப்போல் கடலூர் மஞ்சக்குப்பம் மிஷன்தெருவில் வசிக்கும் லட்சுமி ஜூவல்லரி மேலாளர் தென்னரசு(வயது45) வீட்டிலும் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க. (அம்மா அணி) பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர்கள், டி.டி.வி.தினகரன் வீடு உள்பட பல இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடந்தது. இந்தநிலையில் புதுவை, சிதம்பரத்தில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த நகை கடைகளில் நடந்த சோதனை புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story